Monday, July 4 11 comments

உயிரின் மதிப்பு தெரியாதவர்கள்...




இன்று காலை எழுந்தவுடன் கையில் வழக்கம் போல பேப்பரை எடுத்து வைத்துக்கொண்டு உட்கார்ந்தேன். அரசியல், விளையாட்டு, சினிமா என எல்லாம்கடந்து போக அன்றாட வாழ்க்கைக்குள் நுழைந்தேன். சட்டென கண்ணில் பட்டது ஒரு செய்தி. குப்பைத்தொட்டியில் வீசி எறியப்பட்ட குழந்தை என்று. அட இன்னமுமா இந்த கொடுமை நடக்கிறது என்று யோசித்தவாறே இருக்கும் போது என் பழைய நினைவுகள் தட்டி எழும்பின..


சிறு வயதில் ஒரு நாள் நான் நண்பர்களுடன் தெருவில் விளையாடி கொண்டிருந்தேன் அப்பொழுது, நாய் ஒன்று குப்பை தொட்டியில் இருந்து பிளாஸ்டிக் பையை இழுத்து கொண்டு வந்து போட்டது, அந்த கவரில் ஒரே ரத்தமாக இருந்தது என்னவென்று பார்த்தால் பச்சிளம் குழந்தை, ஆறு ஏழு மாத கரு குழந்தையாக இருந்தது, குழந்தைக்கு ஏதோ கொஞ்சம் உயிர் இருந்தது நாய் கடித்ததால் அந்த உயிரும் பிரிந்தது. இப்படி குப்பை தொட்டியில் குழந்தையை வீசுவது தினம் தோறும் எங்காவது நடந்து கொண்டு தான் இருக்கிறது.

அடுத்ததாக

எங்கள் பக்கத்து வீட்டில் இருந்தவர்களுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருந்தது, ஆண் குழந்தை வேண்டுமென்று மீண்டும் குழந்தை பெற்று கொள்ள ஆசைப்பட்டனர், ஆனால் அவர்களுக்கு மீண்டும் பெண் குழந்தையே பிறந்தது, இன்னொரு பெண் குழந்தை வேண்டாம்மென்று அந்த குழந்தையை நெல் கொடுத்து கொன்று விட்டனர். ஆனால் சில வருடங்கள் கழித்து அவர்களுக்கு மீண்டும் பெண் குழந்தை தான் பிறந்தது.



பிஞ்சு குழந்தைகளை இப்படி குப்பை தொட்டியில் போடுவதற்கும், கொல்வதற்கும் எப்படி தான் மனம் வருகிறதோ..??! பெண்களுக்கு மிகவும் இளகிய மனம் என்று சொல்கிறார்கள் ஆனால் அந்த குழந்தைகளை பெறுவதும், குழந்தையை கொல்வதும் குப்பை தொட்டியில் வீசுவதும் பெண்கள் தானே..?? அப்பொழுது அந்த இளகிய மனம் எங்கே போகிறது...??  முன்பெல்லாம் குழந்தைகளை கொல்வதற்கு வறுமை தான் காரணமாக இருந்தது இப்பொழுது வறுமை என்பது கடைசி இடத்தில் தான் இருக்கிறது.



ஒரு குழந்தை அவ்வளவு சாதாரணமாகி விடுகிறது நம் மக்களுக்கு... ஒரு குழந்தை பிறந்து வளர்ந்து அது நாட்டின் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம். அந்த குழந்தையை அழிப்பதற்கு நமக்கு என்ன உரிமை இருக்கிறது..??

குழந்தையை வளர்க்க முடியவில்லையென்றால் ஏதாவது காப்பகத்தில் விட்டு விடலாமே, அல்லது குழந்தையில்லாமல் எத்தனையோ பேர் இருக்கிறார்கள் அவர்களிடம் கொடுத்து விடலாமே, அதை விடுத்து குழந்தையை குப்பை தொட்டியில் வீசுவதும், கொல்வதும் சரியா..?!! இதையெல்லாம் பார்க்கும் பொழுது, இன்னும் நாம் காட்டுமிராண்டி வாழ்க்கை தான் வாழ்ந்து கொண்டுயிருக்கிறோம், என்பது நினைவுக்கு வருகிறது.



காக்கா, குருவிக்கெல்லாம் இரக்கம் காட்டும் நாம் குழந்தைக்கு இரக்கம் காட்ட கூடாதா..? குழந்தையை கொல்வதற்கு சமுதாயத்தையும், கூட இருப்பவர்களை காரணம் சொல்லாமல், குழந்தையை காப்பாற்ற வேண்டும். காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஒரு தாய்க்கு அதிகமாக இருக்கிறது..!!!  ஒரு குழந்தை குப்பையில் வீசுவதற்கும், கொலை செய்வதற்கும் பெண்களுக்கு அதிகம் பங்கு இருக்கிறது. இதெற்கெல்லாம் மூல காரணம் ஆண் தான், அவன் ஆரம்பத்திலே கைவிட்டு விடுகிறான், பெண் கடைசியில் கைவிட்டு விடுகிறாள், ஒரு குழந்தையை தாயும், தந்தையும் கைவிட்டால் நிலைமை என்ன ஆவது...??   





 
;