Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts
Monday, June 9 0 comments

அவளோடு ஒரு பயணம் (சிறுகதை)




பத்து மணிக்கெல்லாம் ஆபிஸ்ல இருக்கனும்.  இந்த பஸ் இன்னும் வர காணோம். கடிகாரத்தையும் சாலையையும்  பார்த்து கொண்டிருந்தான் சந்தோஷ். 

பஸ் வருவதை பார்த்து  வேகமாக ஓட , பெண் மீது மோதி இருவரும் தடுமாறி கீழே விழ,கூடியிருந்த அனைவரும் வேடிக்கை பார்க்க,  பெண்ணுக்கு கோவம் வர திட்டித் தீர்த்தாள். 

இந்த கலவரத்தில்  பேருந்தை  தவறவிட்டனர்.

ஏற்கனவே லேட் இதுல இவளுக வேறென புலம்பிக் கொண்டே நகர்ந்தான் சந்தோஷ். 

அவனை பார்த்து திட்டி கொண்டே இருந்தாள்.

"ஏய் பவித்ரா விடு டி வாடி போகலாம்" அழைத்து சென்றாள் தோழி. 

மறுநாள் சந்தோஷ் பேருந்திற்காக காத்திருந்தான், இன்றும் தாமதமாகவே வந்தது.

பவித்ராவை கண்டதும் ஒதுங்கி கொண்டு கடைசியாக  பேருந்தில் ஏறினான்.  

சந்தோஷ் அவளையே பார்த்து கொண்டிருக்க, அவள் பார்கையில் குனிந்து கொண்டான். மீண்டும் அவள் திட்டி தீர்தாள்.

தோழியோ காதில் ஏதோ சொல்ல அவளுக்கும் விழுந்தது திட்டு. 

இறங்கும் இடம் வந்ததும்  கட கட வென ஓடி இறங்கி கொண்டான்.  

ஏய் மிஸ்டர், ஏய் மிஸ்டர்  குரல் கேட்டு திரும்பினான் பின்னால்  அவள்.

"என்னங்க வேணும் நான் தெரியாம தான் மோதினேன் சாரிங்க"

"என்ன தெரியாம மோதினே உனக்கு என்ன அவ்வளவு திமிர்"

அதெல்லாம் இல்லைங்க சொல்லி கொண்டிருக்கையில் டிக்கெட்டை மேலே எறிந்து விட்டுச்  சென்றாள்.

அடுத்த நாள் பேருந்தில் அவனை தேடி கொண்டிருந்தாள். அவனை எங்கும் காணவில்லை.  ஒரு இருக்கையில் குனிந்த தலையுடன் புத்தகத்தை  புரட்டி கொண்டிருந்தான்.

இன்றும் அதே மிஸ்டர் தொடங்கியது.

 "அட என்னங்க இன்னைக்கு நான் உங்களை பார்க்கவே இல்லையே எனக்கு சைட் அடிக்கிற அளவிற்கு தைரியம் இல்லைங்க" 

"அப்போ தைரியம் இருந்தா என்ன சைட் அடிப்ப அப்படித் தானே" 

"அட என்ன உங்களோட வம்பா போச்சு" 

மீண்டும் திட்டி டிக்கெட்டை எறிந்தாள்.

அடுத்தநாள்...

அவனை பார்த்தவுடன் அவள் சிரித்தாள். அவன் முறைத்து கொண்டே நகர்ந்து விட்டான்.  

இன்றும் அவள் பின்னால் செல்ல, அவள் வருவதை கண்டதும் நின்று.

"உனக்கு என்ன பெரிய அழகி நினைப்பா உன் முஞ்சை எல்லாம் எவனாவது பார்பானா ஒருதடவை சொன்னா உனக்கு புரியாதா"

சந்தோஷ் கோவத்தோடு  திட்டி தீர்க. அவள் கண்ணீரோடு நின்றாள். 
டிக்கெட்டை முகத்தில் வீசி எறிந்து விட்டு ஒன்றும் பேசாமல் சென்றாள்.

உணவு இடைவேளையின் போது, அவளை திட்டியது மீண்டும் மீண்டும் நினைவுக்கு வர, அவசரப்பட்டு திட்டிட்டோமோ, நினைத்து கொண்டே பாக்கெட்டில் கை வைத்தான். அவள் வீசியெறிந்த டிக்கெட் சுருண்டு கிடந்தது . 

பிரித்து  பார்தால் " ஐ லவ் யூ" என எழுதி இருந்தது.

அப்போது தான் உணர்ந்தான். அவள் டிக்கெட்டை எறியவில்லை ,  தன் காதலை எறிந்திருக்கிறாள். 

 மிகவும் மகிழ்ச்சியோடு அடுத்தநாள் காலை சென்றான். 

அவள் முகத்தை திரும்பி கொண்டாள். 

அவள் கையை பிடித்து, "உனக்கு நான் டிக்கெட் எடுக்கிறேன்" 

இன்னைக்கு மட்டுமா..? என்றாள்.

இல்ல வாழ்கை முழுவதும் எடுக்கிறேன் என்றான்.

அவன் கைகளை இருக்க பற்றி கொண்டாள் பவித்ரா.  
Saturday, May 31 1 comments

தேவதையின் கோலம்.. (சிறுகதை முயற்சி)



வழக்கம் போல நைட் ஷிப்ட் முடித்து விட்டு காரில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தான், கார் வீடிருக்கும் தெருவுக்குள் நுழைந்தது. 
ஐந்து வீட்டை கடந்து கார் நகர்ந்தது .

என்றும் பார்க்காத காட்சியை அன்று அவன் கண்டான்.

இந்த காலை வேளையில் ஒரு பெண் கோலம் போடுகிறாளே, அதுவும் சென்னை பெண்ணா இவள்..?

என்ற ஆச்சரியத்துடன் வீட்டிற்குள் நுழைந்தான்.. மறு நாள் தெரு முனையில் இறங்கி மனதில் திட்டத்தோடு நகர்ந்து கொண்டிருந்தான்.

அன்ன பறவையொன்று அங்கு ஓவியம் தீட்டி கொண்டிருந்தது,

அருகில் சென்றான் சட்டென கைகளை பிடித்து இனி கோலமெல்லாம் போடாதே, சிறிது நேரம் அமர்ந்து விட்டுபோ என தபு சங்கரின் கவிதயை சொல்லிச்சென்றான்.

இவன் மனதில் பதிந்த காட்சி அவள் மனதில் பதியத் தொடங்கியது , அவன் குரல் சட்டென பிடித்த விரல்கள் காட்சிகள் மனதில் ஓடி கொண்டிருந்தது.

நிமிர்ந்து பார்தாள், வீட்டின்னுள்ளே அவன். அவளின் பதற்றம் நிறைந்த கண்கள் புன்னகையை வரவழைத்தது அவனுக்கு.

பின்னால் அவனின் அம்மாவை கண்டதும் அறைக்குள் ஓடி ஒளிந்து கொண்டாள்.

இன்னொரு அறையிலிருந்து அவளின் அம்மா வெளிவர வாங்க வாங்க,
என்ன வெள்ளிக்கிழமை தானே வரேன் சொன்னீங்க ...?

இவன் எங்க என்ன இருக்க விட்டான். என்று சொல்ல அம்மா என்று யாரும் கேட்காதவாறு குரல் எழுப்பினான்.

அறைக்குள் சென்று ஸ்வேதா இவரை தான்மா உன் அப்பா பார்த்து இருக்கார்.

நீ புடவைய கட்டிட்டு வாமா..?

அம்மாவின் குரல் பூமியில் அவளோ வானத்தில் வட்டமடித்து கொண்டிருந்தாள்.

அறை் கதவு திறந்தது.

பார்வை விலகாமல் அவளையே பார்த்து கொண்டிருந்தான்.

தனியா நான் பேசட்டுமா..? என்றான் அம்மாவிடம் சம்மதம் வருவதற்குள் தனியாக சென்றான்.

அம்மாவை பார்வை பார்த்து விட்டு அவளும் சென்றாள்.

அவள் கையை பிடித்து என் வீட்டுக்கு வந்து கோலம் போட உனக்கு சம்மதமா.?

என்றும் என் கைகளை இப்படியே இறுக பற்றிக் கொண்டால் போதும்.

எனக்கு எல்லாம் சம்மதம். என்றாள் புன்னகை மிளிர.

***செளந்தர்***

சும்மா ஒரு முயற்சி செய்தேன் தவறிருந்தால் மன்னித்து கொள்ளுங்கள் அடிப்பவர்களுக்கு தனியறை ஒதுக்கப்படும் 
Thursday, January 26 35 comments

"இரண்டு சூவிங்கம் கொடுங்க"நேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் கதை






பரிதி வழக்கம் போல அதிகாலையே எழுந்து குளித்து முடி திருத்தும் நிலையத்திற்கு புறப்பட்டு கொண்டிருந்தார்.

”என்னப்பா இது காயம்...?!” என கன்னத்தை பார்த்து கேட்டாள் அவர் மகள்.

”அது தெரியலைம்மா... ஏதோ பூச்சி கடிச்சு இருக்கும் போல.. அதான் வீங்கி இருக்கு.”

"என்னப்பா இப்படி சொல்றீங்க..?! பூச்சி கடிச்சது கூட தெரியாமலாதூங்குவீங்க...?? வலி அதிகமா இருக்காப்பா..??”


”வலி கொஞ்சம் அதிகமாதான்ம்மா இருக்கு. கொஞ்சம் சுண்ணாம்பு வச்சா சரியா போய்டும்.”

”ஐயோ... அதெல்லாம் வேணாம்ப்பா..ஹாஸ்பிட்டல் போங்கப்பா..நான் காலேஜ் போயிட்டு வரேன். நீங்க சாப்பிடுங்க” என சொல்லி புறப்பட்டாள்.

மகள் சொல்வதை கேட்காமல் பெட்டி கடையில் சுண்ணாம்பு வாங்கி வைத்து கொண்டு வேலைக்கு கிளம்பினார் பரிதி.


------------------------------------------------------

பரிதி பொறுப்பான குடும்ப தலைவர்.. மனைவி இறந்து பல வருடங்கள் ஆன போதும் தன் கடமைகளை சரியாக செய்து கொண்டிருப்பவர்... முடி திருத்தும் நிலையம் நடத்திவருகிறார். அதன் மூலம் வரும் வருமானத்தை வைத்தே தன் இரு மகள்களையும் படிக்க வைக்கிறார்.

பரிதி. வழியில் உள்ள கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்வது வாடிக்கை. இப்படி நல்ல பழக்கங்களை வைத்திருக்கும் பரிதிக்கு, ஒரு கெட்ட பழக்கமும் இருக்கின்றது.

கோவிலுக்கு சென்று விட்டு அடுத்து அவர் செல்வது மாவா பான் பராக் கடைக்கு. ஒரு நாளைக்கு தேவையான மாவா வாங்கி கொண்டு அங்கேயே சிறிது போட்டு கொண்டு கடைக்கு நகர்ந்தார். மாவா போடும் பழக்கத்தை விளையாட்டாக தொடங்கி விட்டு இப்போது விட முடியாமல் தவித்து வந்தார்.

கடையை திறந்து சுத்தம் செய்து கொண்டிருந்த பரிதி, வாடிக்கையாளர் வந்தவுடன் முடிதிருத்தும் பணியை செய்வதற்கு முன் மீண்டும் ஒரு முறை மாவாவை போட்டு கொண்டார்.  வாடிக்கையாளர் வந்தால் கூட பாக்கு போடுவதை நிறுத்த மாட்டார். மாவா போட்டு வேலை செய்தால் தான் சுறுசுறுப்பாக வேலை செய்யமுடியுமென நினைத்து கொள்வார். 




வாடிக்கையாளர் சென்றவுடன். பரிதியுடைய நெருங்கிய நண்பர் கதிர் தினசரிநாளிதழ் வாங்கி கொண்டு வந்தார். செய்தித்தாளை பிரித்து இருவரும் படிக்கத் தொடங்கினர். மாவா பாக்கெட்டை எடுத்து தன் நண்பரிடம் கொடுத்தார் பரிதி.இருவரும் மாவாவை போட்டு கொண்டு செய்தித்தாளுடன் மாவாவையும் சேர்த்து அரைத்து கொண்டிருந்தனர். இப்படி பரிதி கடை தொடங்கியது முதல் நடந்து வருகிறது...மாவா மூலமே இருவரும் நெருங்கிய நண்பர்கள்.


வாடிக்கையாளர் வந்தவுடன் கதிர் “சரி பரிதி... நான் கிளம்புகிறேன் முடிந்தால் மாலை வருகிறேன். இல்லையேல் நாளை வருகிறேன்” என்று விடைபெற்று கொண்டார் கதிர்.

வாடிக்கையாளரை கவனித்த பரிதி வேலையை பார்த்து கொண்டிருந்த பொழுது பேச்சை தொடங்கிய வாடிக்கையாளர்...


”ஏன் பரிதி... நீ இந்த பாக்கு போடுறதை நிறுத்தவே மாட்டியா..?? முடிவெட்டும் போதாவது நிறுத்தவேண்டியது தானே?”

”அண்ணே...நானும் போடக்கூடாதுன்னுதான் நினைக்குறேன். ஆனா... முடிய மாட்டுதுண்ணே...காலைல கடைக்கு வரும்போது நேரா மாவா கடைக்குதானே கால் போகுது.. நான் முடி வெட்ட பழகும் போது இந்த பழக்கத்தையும் சேர்த்து கத்துகிட்டேண்ணே....”

”அட என்னப்பா நீ... இது சாதாரண விஷயம்ப்பா... பாக்கு போடணும்ன்னு நினைக்கும் போது சூவிங்கம் போட்டுக்கோப்பா... தன்னாலே மறந்திடுவே... சாதாரணமான ஆட்களுக்கே கேன்சர் எல்லாம் வருது. நீ வேற இந்த பாக்க போட்டு மெல்லுற.. பொம்பள பசங்க எல்லாம் வைச்சு இருக்க....பார்த்து நடந்துக்கோ..”


”அண்ணே... இந்த சூவிங்கம் போடுறதையெல்லாம் எப்போவோ செய்து பார்த்துட்டேண்ணே... இருந்தாலும் நான் மீண்டும் ஒரு தடவை முயற்சி செய்து
பார்க்கிறேன்.”

ஐம்பது ரூபாயை கொடுத்து வாடிக்கையாளர் விடைபெற்று கொண்டார்...

------------------------------------------------------

இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். அருகிள் வந்த மூத்தமகள்..
“என்னப்பா இன்னைக்கும் பாக்கு போட்டீங்களா?”

”ஏன்ப்பா இப்படி பாக்கு போடுறீங்க..?! எத்தனை தடவை சொன்னாலும் கேக்க
மாட்டீங்களா..??”

எதுவும் பேசாமல் நின்று கொண்டிருந்தார் பரிதி...

”சரி வாங்க சாப்பிடலாம்.. பாக்கு போட்டு உடம்பை கெடுத்துக்காதீங்கப்பா..”

சாப்பிடும்போது கேட்டாள், ”என்னப்பா ஹாஸ்பிட்டல் போனீங்களா...??”

”இல்லம்மா... கொஞ்சம் சுண்ணாம்பு வச்சேன். வலி கொஞ்சம் பரவாயில்லை.
தூங்கி எழுந்தா சரியா போய்டும் ”

இரவு உணவை முடித்து படுக்க சென்றார்.

காலை வெகு நேரமாகியும் எழவில்லை. சோர்வில் இன்னும் தூங்கிக்கொண்டிருந்தார்.

------------------------------------------------------------------------------

கதிர் செய்தித்தாளை வாங்கிக் கொண்டு கடைக்குச்சென்றார். கடை இன்னும் திறக்கப்படாமலே இருந்தது.பரிதியின் வருகைக்கு காத்திருந்து...அங்கேயேபேப்பர் படித்து கொண்டிருந்தார் கதிர். தன் வேலைக்கு நேரம் ஆவதால் செய்தித்தாளை கடையின் ஷட்டரில் மாட்டி வைத்து விட்டு சென்று விட்டார்.

மறுநாளும் கடை பூட்டி இருப்பதை பார்த்த நண்பர் பரிதியின் வீட்டுக்கே சென்றார். அங்கே பரிதி காய்ச்சலில் படுத்துகொண்டிருந்தார்.

”என்ன பரிதி... உடம்பு சரி இல்லையா...?! ”

”ஆமாண்டா... காய்ச்சல் அதிகமா இருந்துச்சு... நேத்து நைட்தான் கிளினிக்
போயிட்டு வந்தேன். ”

”என்னடா சொன்னாங்க... இப்போ எப்படி இருக்கு...?!”

”இப்போ காய்ச்சல் இல்லை. கன்னத்துல புண் இருக்கு. அதனாலதான்வந்திருக்கும்.எதுக்கும் ஒரு வாரம் கழிச்சு வந்து பாக்கச் சொன்னாரு டாக்டர். இன்னைக்கு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு நாளை கடை
திறந்திடுவேன்டா.... ”

”சரிடா... எனக்கும் வேலைக்கு நேரமாச்சு. நானும் கிளம்புறேன். நாளைக்கு கடைக்கு வரேன். ”

-----------------------------------------------------------------------------

ஒரு வாரத்திற்கு மேல் காயம் ஆறுவதும், மீண்டும் வருவதுமாய் இருந்ததால்
மருத்துவமனைக்கு செல்லாமலே இருந்தார் பரிதி.

வழக்கம் போல காலையில் கதிர் பேப்பர் கொண்டு வர..” என்னடா இன்னுமா உனக்கு காயம் ஆறல.. இதுல பாக்கு வேறயா” என்று மாவாவை பிடிங்கி கொண்டார்.

”டேய்... கொஞ்சம் மாவா கொடுடா... நீ மட்டும் போடுறே..?”

”டேய்...ஒழுங்கா பேப்பர் படி.. ”  என பேப்பரை பிரித்த பொழுது... ஒரு துண்டு நோட்டீஸ் ஒன்று விழுந்தது..எதாவது விளம்பரமாய் இருக்குமென தூக்கிப்போட பார்த்தார் பரிதி.

”என்னடா அது என வாங்கி படித்த கதிர்.....

அதை பரிதியிடம் காண்பித்தார்..பார்த்தவுடன் இருவருமே மௌனமாய் இருந்தனர்...புற்றுநோய் கண்டறிய இலவச சோதனை என புற்று நோயின் அறிகுறிகள் தொடர்பான படங்கள் அந்த நோட்டீஸில் இருந்தது..  பரிதியின் கன்னத்தில்இருந்த காயங்கள் போலவே நோட்டீஸில் இருந்தது.

”என்னடா எனக்கு இருக்கற காயம் மாதிரியே இந்த நோட்டிஸ்ல இருக்கு. எனக்கு கேன்சரா இருக்குமோ..??”

”அதெல்லாம் இருக்காதுடா...ஆனா நமக்கும் நாற்பது வயசுக்கு மேல ஆகுது, நாற்பது வயசுக்கு மேல இருக்குறவங்க புற்றுநோய் இருக்கான்னுபரிசோதனை பண்ணிக்கணும்ன்னு சொல்றாங்க... வா... நாம போய் சும்மா பார்த்துட்டு வருவோம்.

------------------------------------------------------------------------

மறுநாள் புற்றுநோய் இருக்கிறதா இல்லையா என பார்க்க சென்றனர்... பரிதியை ஒரு டாக்டர் பரிசோதனை செய்து கொண்டிருந்தார். டாக்டர் மற்ற டாக்டரை அழைத்து காண்பித்தார்..

”பாக்கு போடுவீங்களா..?? ”

”ஆமா டாக்டர்..”

”எத்தனை வருசமா போடுறீங்க..??”

”இருபதுவருசமா போடுறேன் டாக்டர்..”

”வலி அதிகமா இருக்கா..?”

”ஆமாங்க... வலி அதிகமா இருக்கு.. ”

”பரிதி உங்களுக்கு புற்று நோய்க்கான அறிகுறி தெரியுது. நாளைக்கு ஹாஸ்பிட்டல் வாங்க... உங்க காயத்தை சோதனை செய்யணும்..நல்ல வேளையா இப்பயேவந்தீங்க... புற்றுநோய் முத்திப்போய் இருந்தா ஒண்ணுமே செய்திருக்க முடியாது...  கண்டிப்பா நாளைக்கு ஹாஸ்பிட்டல் வாங்க... புற்றுநோயை மேலும் பரவாம தடுத்திடலாம்.உங்க வீட்டுல யாராவது நாற்பது வயதிற்கு மேல இருந்தா வந்து பரிசோதனை செய்து கொள்ள சொல்லுங்க பரிதி..”

”சரிங்க டாக்டர்” என தளர்ந்த குரலில் கூறி வெளியேறினார் பரிதி..

கதிரும் பரிதியும் பேசிக்கொண்டே சென்றனர்...

”இனிமே நாம பாக்கே போடக்கூடாது பரிதி.. ” என்றார் கதிர்.

”ஆமாண்டா...நல்ல வேளை உனக்கு ஒன்ணுமில்லைன்னு சொல்லிட்டாங்க..  உனக்கு
ஒண்னும் ஆகலேன்னு இனி நீ பாக்கு போட ஆரம்பிச்சிராத..”

”நீ வேற பரிதி... நான் இனி போட மாட்டேன்டா.. யாராவது போடுறதை
பார்த்தாலும் தடுக்கப்போறேன்டா.. ”

”நல்லா சொன்னடா.. ஆனா எனக்கு இந்த நோய் தீவிரமாகிறதுக்குள்ள என் மகள்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை எப்படி அமைச்சு தரப்போறேன்னு கவலையா
இருக்கு.”

”கவலைப்படாதே அதான் ஆரம்பத்திலேயே வந்துட்டோம்ல சரியாகிடும்..”

“இனிமே நீயும் நல்லா உடம்பை கவனிச்சிக்கோ கதிர்” லேசாக கண்கள் கலங்கின பரிதிக்கு…

“நிச்சயமாடா.. என் மனைவிக்குக் கூட நாற்பது வயசு ஆகுது...அவளையும் நாளைக்கு ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போய் சோதனை செய்யப்போறேன்டா சரி...வா பரிதி... டீ குடிச்சிட்டு போகலாம்.. ”

”சரிடா. ”

பரிதி பெட்டி கடைக்கு சென்று... ”இரண்டு சூவிங்கம் கொடுங்க” என்றார். 







Tuesday, August 9 21 comments

அடைமழை காதல்.. நித்தியா (சிறுகதை)

 
பதிவுலகில் தொடர்பதிவு என்பது பரிட்சயம். இங்கு நாங்கள் நண்பர்களாகிய கூர்மதியன் ,ரேவா, நான் ஆகிய மூவரும் ஒரு முயற்சி செய்திருக்கிறோம். ஒரே தலைப்பை எடுத்து யார் என்ன எழுதபோகிறோம் என்று சொல்லிக்கொள்ளாமல் தங்கள் மனதுக்கு படும் கதை,கவிதை,கட்டூரை என்று எதுவாக வேண்டுமானாலும் வடிவமைக்கலாம் என்று முடிவு செய்து எழுத ஆரம்பித்தோம். இதன் படி ''அடைமழை காதல்'' என்னும் தலைப்பில் எங்கள் கண்ணோட்டத்தில் பதிவு எழுத ஆரம்பித்தோம். அதன்படி கீழே தொடர்வது என்பதிவு..!






"மணி எட்டு ஆச்சு இந்த பையன் இன்னும் எழுந்திருக்காம இன்னும் தூங்கிட்டு இருக்கான், டேய் ஆதி .. எழுந்திரிடா" ஆதித்தியா அம்மாவின்...குரல் சமையல் அறையில் இருந்து படுக்கை அறை வரை ஒலித்தது ..அம்மாவின் குரல் கேட்டும் இன்னும் படுக்கையை விட்டு எழவில்லை, டேய் எழுந்திரி வேலைக்கு போக டைம் ஆச்சு.. என தட்டி எழுப்பியவுடன் தான் அவனுக்கு விடிந்தது, இது தினமும் அவனின் வாடிக்கை தான். .

குளிச்சு முழிச்சி  பரபரவென வந்தவன், நேரமாச்சி இன்னுமா சாப்பாடு கட்டுறே என அம்மாவை கடிந்து கொண்டான். "எழுந்தது லேட்டு...... என்ன கேள்வி கேக்குறீயா..??  உனக்கெல்லாம் ஒருத்தி வருவா அப்போ கஞ்சிதண்ணி கூட இல்லாம போவே அப்போ தெரியும் டா என்ன பத்தி" "என்னம்மா காலையியே உன் புலம்பல ஆரம்பிச்சிட்டியா..?? சரிம்மா நான் போயிட்டு வருகிறேன்" என்று பேருந்து நிலையம் நோக்கி நடந்து சென்றான்,  நேரம் சரியாக 8.45 அவன் செல்லும் பஸ் வந்து நின்றது. ஒரு மணி நேர பயணம், எப்போதும் பயணத்தின் போது புத்தகம் படிப்பதும், கவிதைகள் எழுதுவதும் அவன் வேலை, வழியில் நடப்பதையெல்லாம் பார்த்து கவி எழுதுவதே அவன் பொழுது போக்கு. 




வழக்கம் போல ஜன்னல் ஓரங்களில் பார்த்து கொண்டு வந்த அவன் திடீரென்று  இறங்க முற்பட்டான் பூக்களை கோர்க்கும் கைகளை பார்த்து, அவன் வழக்கம்போல் இறங்கும் ஒரு ஸ்டாப் முன்பாகவே, பேருந்து ஓடிக்கொண்டு இருக்கும் பொழுதே இறங்கி கிழே விழுந்தான். வண்டியில் சிக்கியிருக்கவேண்டியது எதோ தப்பித்து கொண்டான், அச்சமயம் கூட அவனை கவிதைகளே ஆக்கிரமித்தது..

தேவதையை பார்க்கையில் மரணத்தை 
தழுவி இருப்பேன்..!!
பாவம் எமன் இவளை பார்த்திருப்பான் 
போல வந்தவேலையை விட்டு 
வேறுவேலையில் இருக்கிறான்..!!

  

கீழே விழுந்து சட்டேன எழுந்தான், அவள் பூ கடை நோக்கி நடந்து ஓரமாக நின்றான், அடி ரொம்ப பட்டுடுச்சா கொஞ்சம் தண்ணி குடிக்குறீங்களா..??மெல்லிய குரல் கேட்க சட்டென திரும்பி பார்த்தான். அவள் முகம் பார்த்து ஒன்றும் பேசாமல் நின்று கொண்டு இருந்தான், ஏங்க உங்களை தான், அவனுக்கு அவள் விசாரித்தது பிடித்து இருந்தது, அவள் கரிசனக்காரி என புரிந்து கொண்டான். 




அதெல்லாம் ஒன்னுமில்லைங்க எனக்கு வேலைக்கு டைம் ஆச்சுங்க நான் போயிட்டு வரேன் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்ப மனமில்லாமல் கிளம்பிம்பினான். வேலையில் அவன் கவனம் இல்லாமல் அவள் நினைவாகவே இருந்தான், ஒரு ஐந்து நிமிடம் பார்த்ததற்கே வா இப்படி..? என தனக்குள்ளேயே கேள்வி கேட்டு கொண்டான், மீண்டும் அவளை பார்க்கவேண்டுமென எண்ணினான், இப்போதே போய் பார்க்கலாமா அல்லது வேலை முடித்து போகலாமா என யோசித்தான், வேலை முடித்தே போகலாம் என முடிவெடுத்து அரைமனதுடன் வேலையை தொடர்ந்தான். பர பரவென வேலையை முடித்து அவளை பார்ப்பதற்காக சென்றான்..

அவள் வருவதற்கு முன்பே காத்திருந்தான், 5 நிமிடத்திற்கு பின் வந்தாள், பூக்களின் நந்தவனமே வந்து கொண்டு இருப்பதாக, அவன் மனம் சொல்லியது, தூரமாக தெரிந்த அவள் உருவம், பக்கம் வந்து கொண்டே இருந்தது, அவள் பக்கம் வரவர இவன் பார்வை விரிவானது. அவள் இவனை பார்க்க வில்லை அவளின் வேலையில் மும்முரமாக இருந்தாள், அவளின் அழகை ரசித்துக்கொண்டு, மனதிலே வர்ணித்து கொண்டுயிருந்தான், 

அவளின் நெற்றியில் குங்குமம், திருநீர், மஞ்சள் என ஒன்றன் கீழ் ஒன்றாக அவளின் நெற்றியை அலங்கரித்து இருந்தது, படிந்து வாரிய அவள் கூந்தல், அதில் ஒற்றை சாமந்தி பூ, பூவிற்கே பூவைக்கும் அதிசயம் இங்கு தான் நடந்து இருக்கிறது என அவன் மனதிற்குள் வரித்து கொண்டே சென்றான், 

பெண்ணே நீ சூட்டும் 
பூக்கள் தவிர 
மற்ற அனைத்தும் வாடி 
விடுகிறது நீ சூடா ஏக்கத்தில்..!!!

என கவிதையை நினைத்துக் கொண்டே வீட்டிற்கு கிளம்ப நினைத்தான், கிளம்பும் முன் அவளிடம் ஏதாவது பேச வேண்டும் என நினைத்தான், அவளின் திருத்தப்படாத புருவங்களை பார்த்து மடிந்து வீடு நோக்கி சென்றான். 


மறுநாள் வழக்கம் போல வேலைக்கு சென்றான், அவளின் பேருந்து நிலையம் வந்தது... பேருந்தும் நின்றது... அவளை இவன் பார்ப்பதற்கு முன், அவள் இவனை பார்த்து கொண்டு இருந்தாள், இவன் பார்வை பட்டவுடன் அவள் இதழ் புன்னகையால் மலர்ந்தது, ஆதித்தியாவிற்கு சொல்ல முடியாத ஆனந்தம் அவள் இன்னும் நம்மை நினைவில் வைத்திருக்கிறாளே, அவள் கண்கள் ஏதோ கேள்விகளை கேட்க இவனுக்கு அது புரிவதற்குள் பேருந்து அங்கிருந்து கிளம்பியது, இறங்கிவிடலாம் என எண்ணினான் வேண்டாம் மீண்டும் அவள் முன் விழுந்து விட போகிறோம் என அத்திட்டத்தை கை விட்டான்.      


இன்றைய தினம் அவனுக்கு வேகமா நகர்ந்து விட்டது அவளின் புன்னகையால். மீண்டும் மறு நாள் அதே போல் பேருந்து நிலையத்தில் அவள் காத்திருக்க தொடங்கினாள், பேருந்தை பார்த்தவுடன் சட்டென ஒரு சாமந்தி பூவை எடுத்து தலையில் வைத்து கொண்டாள், அவளின் முகம் இன்று மேலும் பிரகாசமாய் இருந்ததை கவனித்து விட்டான், பேருந்தில் இருந்தே சைகையில் ஏதோ கேள்வியை ஆதித்தியா கேட்க... அவள் என்ன வென்று கேட்டாள், அவளுக்கு இவன் சைகை ஒன்றும் புரியவில்லை, இருவரின் மனதோடு பேருந்தும் நகர்ந்தது.

மறுநாள் ஆதித்தியா அவளிடம் பேசவேண்டும் என முடிவெடுத்தான், பேருந்து நிற்பதற்குள் இறங்குவதற்கு தயாராகிவிட்டான், அவளின் கண்கள் பேருந்து ஜன்னலை ஆக்கிரமித்து இருந்தது, இவள் முன் வந்து நிற்கவும் வெட்கப்பட்டு கீழே குனிந்து கொண்டாள். இவன் பேசுவதற்கு வார்த்தைகளை தேடிக்கொண்டுயிருக்க, சட்டென அவளிடமிருந்து கேள்வி வந்து விழுந்தது..!!!

நேத்து நீங்க என்னமோ சைகை காட்டி கேட்டீங்க என்ன கேட்டீங்க...??? 

சில நிமிடம் மௌனமாய் நின்றான்... 

நீங்க அன்னைக்கு என்ன பார்த்து ஏன் சிரிச்சீங்க..?? அத பத்தி கேட்டேன்.. சரி சொல்லுங்க ஏன் சிரிச்சீங்க..?? 

நான் எதுக்கோ சிரிச்சேன் ஏன் உங்க கிட்ட சொல்லனுமா என்ன..அதெல்லாம் சொல்ல முடியாது என மீண்டும் சிரிக்க.. 

இப்போ சொல்ல போறீங்களா இல்லையா உங்க பேர் என்ன..?? என சிறு கோபத்துடன் கேட்க..

என் பேரு நித்தியா... நீங்க நினைக்குறது எதுவும் நடக்காது...!!!

என் பேரு ஆதித்தியா, நான் என்ன நினைச்சேன் உனக்கு எப்படித் தெரியுமென ஆதித்தியாஅடுத்த கேள்வியை கேட்க..


 போங்க போங்க அப்பறம் வாங்க பதற்றத்துடன் சொல்ல அவள் பதற்றத்தை கண்டு ஆதி சற்று நகர்ந்து சென்றான்... 

அவளிடம் யாரோ ஒருவன் வந்து வாக்குவாதம் செய்து பணம் கேட்டு கொண்டுயிருக்க இவனுக்கு ஒன்றும் புரியவில்லை.. அவள் கண்கலங்குவதை பார்த்து வந்தவனிடம் என்னவென்று கேட்டுவிடலாம் என்ன நினைத்தான்,  சண்டை போட்டால் ஏதாவது நினைத்து விடுவாளோ என அமைதியாக இருந்து விட்டான்.

வந்தவன் அவளிடம் இருந்த பணத்தை எல்லாம் வாங்கி பிடுங்கி சென்று விட்டான்...

சிறிது நேரம் மௌனமாகவே கழிந்தது...

அவளின் கண்ணீர் தொடர்ந்து கொண்டுயிருந்தது... 

யார் அவர் ஏன் உன் பணத்தை பிடுங்கி சென்றார்..???

அவர் என்னுடைய அண்ணன்.... இது எப்போதும் நடப்பது தான் குடிப்பதற்கு என்னிடம் பணம் வாங்கி செல்கிறார், அவருக்கு தெரியாமல் பணத்தை மிச்சப்படுத்தி தான் நானே பூ விற்று வருகிறேன், இன்னும் ஆறு மாதம் தான் இங்கு இருப்பேன் மீண்டும் வேலைக்கு ஊருக்கு எங்க அண்ணன் என்னை அனுப்பி விடுவார் என்றாள். 

என்ன இன்னும் ஆறு மாதம் தான் இருப்பியா..?? ஏன் இங்க செய்ற வேலை என்ன ஆச்சு..??  

நித்தியா தொடர்ந்தாள்..

நான் ஏற்கனவே பத்து வருடமாக ஊரில் ஒரு வீட்டில் வேலை செய்து வந்தேன், முன்பே எங்க அண்ணன் இரண்டு லட்சம் வாங்கி என்னை வேலைக்கு அனுப்பி விட்டார், இப்போது மீண்டும் அங்கேயே அனுப்பி விடுவார், அதனால் தான் சொன்னேன், நீங்க நினைப்பது நடக்காதென்று, உங்களை பார்க்கும் பொழுது நெடுநாள் பழகியது போல் ஒரு உணர்வு இருந்தது அதான் உங்களை பார்த்தவுடன் சிரித்தேன். என்றாள் எனக்கும் எல்லாரையும் போல் இருக்க வேண்டுமென்று ஆசை தான் ஆனால், என்னால் முடியாது என் வறுமை தான் காரணம், இங்கு இத்தனை ரோஜா இருந்தும் என்னால் எடுத்து வைத்து கொள்ளமுடியாது.. இது தான் என் நிலைமை. 


அவளின் நிலைமைகளை சொல்ல சொல்ல அவன் மனதில் உறுதியானது அவனின் காதல், இவளையே மணக்க வேண்டுமென எண்ணி கொண்டான், இன்று முதல் உன் நிலைமை மாறப் போகிறது கவலை படாதே உனக்கு நான் இருக்கிறேன். எனக்கு வேலைக்கு நேரமாகிறது நான் நாளைக்கு உனக்கு ஒரு நல்ல செய்தியோட வருகிறேன் என கிளம்பி சென்றான்.  அவனின் பேச்சுக்கள் நித்தியாவிற்கு ஆறுதலாக இருந்தது கண்ணீரை துடைத்து கொண்டே அவன் செல்வதை பார்த்து கொண்டு இருந்தாள்..


வேலை முடிந்து ஆதித்யாவின் வீட்டில்...

அம்மா நான்  திடீரென்று கல்யாணம் பண்ணிகிட்டா என்னமா சொல்வீங்க..???

என்னடா இப்படி குண்ட தூக்கி போடுறே..?? அப்படி ஏதும் கல்யாணம் செய்திட்டியா என்ன..?? 

அப்படியெல்லாம் இல்லமா கேக்குறேன் நீங்க சொல்லுங்க நான் ஒரு பெண்ணை காதலிக்குறேன் நீங்க என்ன செய்வீங்க..??? 

என்ன என்னடா செய்ய சொல்றே, எனக்கு இருக்குறது ஒரே பையன், அதனால உன் ஆசை தான் எனக்கு முக்கியம் அதுவுமில்லாம அது உன் வாழ்க்கை நானா கடைசி வரைக்கும் வர போறேன் உனக்கு பிடிச்சு இருந்தா அவங்க வீட்டுல பேசி உனக்கு கல்யாணம் செய்து வைப்பேன்... ஏண்டா ஏதாவது பெண்ணை காதலிக்குறீயா..??

ஆமா அம்மா, ஆனா நான் இன்னும் அந்த பொண்ணு கிட்ட சொல்லல.. அந்த பொண்ணு ரொம்ப கஷ்டப் படுறாமா.. நீ என்னைய வளர்க பூ கடையெல்லாம் போட்டியே அதே மாதரி அந்த பொண்ணும் பூ விக்குறாமா, அவங்க அண்ணன் ஒரு குடிகாரன் என அவளை பற்றியே.. பேசிக்கொண்டு இருந்தான் ஆதித்யா. 

நீ தாம்மா அவங்க வீட்டுல பேசி கல்யாணம் செய்து வைக்கணும்

சரி டா நான் நாளைக்கு அந்த பொண்ண பாக்குறேன்.. எப்படி இருக்கானு அப்பறம் அவங்க வீட்டுல பேசுறேன் 

அம்மானா அம்மா தான் என கொஞ்சி விட்டு சென்றான். 

மறுநாள் அவளிடம் அம்மாவிடம் பேசியதையெல்லாம் சொல்லி தன் காதலை சொல்லி விடலாம் என முடிவெடுத்தான். 

காலை வழக்கம் போல் வேலைக்கு கிளம்பினான், படு வேகமாக அம்மா நான் கிளம்புறேன் என சொல்லி முடிக்கையில் நான் நைட் வரேன் எனக்கு அந்த பொண்ணை காட்டு என அவன் அம்மா சொல்ல சிரித்த முகத்துடன் சரியென கூறிவிட்டு பேருந்து நிலையம் நோக்கி சென்றான். 


ஏதோ நற்செய்தி சொல்வேன் என்றேவுடன் அவளிற்கு அதை அறிய ஆவலாய் காத்திருந்தாள், பேருந்தில் சென்று கொண்டுயிருக்கும் பொழுதே என்ன பேசவேண்டுமென தீர்மானித்து கொண்டான், பேருந்து நிலையம் வந்தது அவன் இறங்கினான், இருவரின் முகமும் ஒன்று போல் மலர்ந்தது, அவள் முன் சென்று நின்றான், 

என்ன நல்ல விஷயம் சொல்ல போறீங்க..?? சீக்கிரம் சொல்லுங்க என,, அவள் கேட்க இவன் கொஞ்சம் குறும்பு செய்ய நினைத்தான்.

சரி சரி எனக்கு ஒரு ரோஜா பூ கொடு ஒரு ரோஜா எவ்வளவு..??? 

சட்டென் அவன் முகம் பார்த்து யாருக்கு பூ..?? என்றாள்..

நீ முதலில் ரோஜா கொடு..

அவள் ரோஜா வை எடுக்க சென்றாள் 

என் காதலிக்கு கொடுக்குற பூ நல்லா பூ வா கொடு என்றதும்.. அவளது கண்ணீர் ரோஜா மீது பட..

ரோஜாவை அவள் எடுத்து கொடுக்க...!!! 

அவன் மீண்டும் அவளுக்கே கொடுத்தான்... உனக்கு தான் இந்த ரோஜா .. 

அவளின் கண்ணீர் அதிகமானது,,,  அவளின் கண்ணீர் அவன் மீது காதலை உறுதி படுத்தியது..

நீ என்னை கல்யாணம் செய்து கொள்கிறாயா..?? ..

இதற்கும் அவள் கண்ணீரே பதில் கூறியது.. கண்ணீரை துடைத்து கொண்டே கேள்வியை கேட்டால் இதுவெல்லாம் நடக்குமா..?? 

நீ ஏன் கவலைபடுறே நான் எங்க அம்மாவிடம் சம்மதம் வாங்கி விட்டு தான் வந்திருக்கிறேன். உங்க அண்ணனிடம் சொல்லி பேச சொல்கிறேன் என்றான், அவள் வார்த்தைகள் வராமல் நின்றுகொண்டு இருந்தாள். 

வேலைக்கு சென்று விட்டு உன்னை பார்க்க வருகிறேன் அம்மா உன்னை பார்க்க வேண்டுமென்றார்கள், நீ ரெடியா இரு என்றதும் "என்ன அத்தை வாரங்களா" என முகம் மலர்ந்து அவளுக்கு. சரி ரோஜாவை தலையில் வைத்து கொள்,  சரிங்க நீங்க போயிட்டு வாங்க என்றாள், அவள் வாழ்க்கையில் இன்று தான் மிகவும் சந்தோசமான நாள் அவளுக்கும் வாழ்க்கை, குடும்பம், பாசம் எல்லாம் கிடைக்க போகிறதென்று கனவு கண்டு கொண்டு இருந்தாள். 


ஆதி அம்மாவின் வருகைக்கு எதிர்பார்த்து காத்திருந்தாள்.. வருகையை பார்த்து பார்த்து கழுத்து வலியே வரும் அளவிற்கு திரும்பி திரும்பி பார்த்து கொண்டு இருந்தாள். 


அம்மாவும் மகனும் ஒன்றாக வருவதை பார்த்து... எழுந்து நின்றாள். ஆதி இவளை நித்தியா என அறிமுகம் செய்து வைக்க... ஆதித்யாவின் அம்மா .

எவ்வளவு அழகா இருக்கா டா பொண்ணு நல்லா தான் டா இருக்கா, ஆதித்யாவிற்கு மிகவும் சந்தோசமாய் இருந்தது .. 

உன் பேர் என்னமா ...??

நித்தியா என அவள் கூற..?? 

அம்மா நான் ஒன்னு உங்களை கேட்கலாம என நித்தியா கேட்க..

என்னம்மா கேளு 

நான் உங்களை அம்மான்னு கூப்பிடலாமா என்றாள்.. எனக்கு நினைவு தெரிந்து நான் யாரையும் அம்மான்னு கூப்பிட்டதே கிடையாது.. உங்களை அப்படி கூப்பிடலாமா.??


இந்த வார்த்தையை கேட்டதும் ஆதித்யாவின் அம்மாவிற்கு சொல்ல முடியாத சந்தோசத்திற்கே சென்று விட்டார், தனக்கு நல்ல மருமகள் கிடைக்க போறா என்ற ஆனந்தம் அவர் முகத்தில் தெரிந்தது...

நீ தாராளமா அப்படியே கூப்பிடுமா எனக்கும் ரொம்ப சந்தோசமா இருக்குமென பேசி கொண்டு இருக்கும் போதே நித்யாவின் அண்ணன் வந்து நின்றான்   



ஏண்டி பூ விக்காம அரட்டை அடிச்சிட்டு இருக்கியா..?? என கடிந்து கொண்டான், 

ஆதித்யாவின்அம்மா யாரென கேட்டு தெரிந்து கொண்டு பேச்சை தொடங்கினார்... 

உங்க தங்கச்சியும் என் பையனும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறாங்க நாம பேசி அவங்களுக்கு கல்யாணம் செய்து வைக்கலாம் நீங்க என்ன சொல்றீங்க என்ன கேள்வி கேட்க 


நித்தியாவின் கன்னத்தில் பளாரென அறைந்து "ஏண்டி உன்னை பூ விக்க சொன்னா ஒருத்தனை பிடிச்சுட்டு வறீயா"..?? மீண்டும் அடிக்க முயலும் போது ஆதித்யாவின் அம்மா தடுத்து ஏங்க அடிக்குறீங்க .....இப்போ என்ன நடந்து போச்சு... நான் தானே பேசுறேன்.. உங்களுக்கு சம்மதமான்னு சொல்லுங்க... 

என்னால கல்யாணம் பண்ணி தரமுடியாதுங்க... 

ஏன் காரணம் சொல்லுங்க ஏன் முடியாது ...?

"இவள நான் வீட்டு வேலைக்கு அனுப்ப போறேன் அங்க அனுப்பினா எனக்கு மூணு லட்சம் தருவாங்க அதை விட்டுட்டு இவளுக்கு நான் செலவு பண்ணி கல்யாணம் செய்து வைக்கணுமா..?? அதெல்லாம் முடியாது உங்களுக்கு இந்த மாக ராணி தான் வேணும்னா எனக்கு மூணு லட்சம் கொடுத்து கூப்பிட்டு போங்க"

நித்தியா ஒன்றும் செய்யமுடியாமல்  நின்று கொண்டிருந்தாள்...

எவ்வளவு பணம் வைச்சு இருக்க தா டீனு மீண்டும் அடிக்க.. 

ஆதித்யாவின் அம்மாவிற்கு கோவம் வர இனி மேல் அவ மேல கை வைச்ச நடக்குறதே வேற உனக்கு தேவை பணம் தானே பணத்த கொடுத்திட்டு என் மருமகள கூப்பிட்டு போறேன் என சொல்லி நித்தியாவிற்கு ஆறுதல் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றனர்..

வீட்டிற்கு சென்றதும் ஆதித்யா என்னமா அப்படி சொல்லிடீங்க நம்ம கிட்டஅவ்வளவு பணம் இல்லையே என்ன செய்வோம்... என கேள்வி கேட்டான்,  பின்னா என்னப்பா நம்ம வீட்டு மருமக, அவள நம்ம வீட்டுக்கு கூப்பிட்டு வந்து சந்தோசம வைப்போம். என் கிட்ட இருக்க நகையை வைச்சா ஐம்பதாயிரம் கிடைக்கும் ஊர்ல இருக்க இடத்தை அடகுவச்சா 2 லட்சம் மேல கிடைக்கும், நீ ஊருக்கு போய் அந்த வேலைய பார்த்து காசு வாங்கிட்டு வா, நாம நித்யாவை கூப்பிட்டு வருவோம், 

மறுநாள் ஊருக்கு கிளம்பும் முன் நித்தியாவை பார்த்து விட்டு போகலாம் என நினைத்து அவளை பார்க்க சென்றான் அவள் முகம் முழுவதும் காயமாக இருந்தது, என்ன நடந்திருக்குமென்று புரிந்து கொண்டான், நீ கவலை படாதே இன்னும் ரெண்டு நாள் தான்.. உன்னை எங்க வீட்டுக்கு அழைத்து செல்கிறேன் என சொல்லி விட்டு சென்றான்.. பத்திரமா போயிட்டு வாங்க என்றாள்..

இரண்டு நாளில் அவளை கை பிடிக்க போகிறோம் மென்று ஆனந்தமாய் ஊருக்கு கிளம்பினான், பணம் வசூலித்து பத்திரமாக வீடு வந்து சேர்ந்தான், சந்தோசமாக அம்மாவும் மகனும் பணம் எடுத்து கொண்டு அவளை பார்க்க அவள் வீட்டுக்கு சென்றனர்.. அவளின் வீட்டு முன் ஒரே கூட்டமாக இருந்தது என்னவென்று பதறி போய் ஆதித்யாவின் அம்மா பார்க்க, அவள் சடலமாக கிடந்தாள் ஆதித்தியா ஓடி வந்து கதறி அழுதான். இவையெல்லாம் அவன் அண்ணனின் செயல் தான், என கோவத்துடன் ஆதித்யா அவன் மீது பாய... அனைவரும் தடுக்க, அவளை பார்க்க சென்றான், முகமெல்லாம் காயமாக இருந்தது, அவளின் நிலையை கண்டு கதறி அழுதான்,  உனக்கு தேவை பணம் தானே ஏன் இப்படி செய்தாய் என அவனை கேட்டு கதறினான்..

அவன் அம்மாவிடம் சென்று.. 

"அம்மா நான் அவளை திருமணம் செய்துகொள்கிறேன் வாக்கு கொடுத்து இருக்கேன்ம்மா.. இப்போ நான் அவளுக்கு தாலி கட்டுறேன்ம்மா நீங்க சம்மதம் தாங்கம்மா" சொல்ல.. "சரிப்பா நான் உனக்கு சம்மதம் தரேன்" ஒரு மஞ்சள் கயிறை வாங்கி வந்து தாலி கட்ட சொல்லி சொன்னார் ஆதித்யாவின் அம்மா.. தாலி கட்டும் போது அவளின் அண்ணன் வழி மறைத்து நான் கேட்ட பணத்தை கொடுத்து விட்டு நீ தாலியை கட்டிக்கோ என சொல்ல..
பணத்தை அவன் முகத்தில் தூக்கி எறிந்தார் ஆதித்யாவின் அம்மா.. அவன் தாலி கட்ட தலையை தூக்க தலையெல்லாம் ரத்தமாக இருந்தது.. உன் ரத்தத்தை கொடுத்து நீ என்னுடன் சேர வேண்டுமா இதற்கு நீ என்னுடன் சேராமலே இருந்திருக்கலாம்.. உன் ஆசை இப்பொழுது நிறைவேறி விட்டது..... உன்னுடன் சேர்ந்து வாழவேண்டுமென்ற என் ஆசையை யார் நிறைவேற்றுவார்கள்..?? என கதறினான்.



தம்பி கூர்மதியன் பதிவை பார்க்க 


ரேவா வின் பதிவை பார்க்க 



Thursday, April 21 18 comments

நண்பேண்டா....! (முகிலன்)





விடியற் காலை மணி 5 இருக்கும் மாரிமுத்து எழுந்து..காமாட்சியை கூப்பிட்டு ஆத்தங்கரைக்கு போனாருங்க....போய் காமாட்சியை நல்லா குளிக்க வைச்சு...நெத்தியில் மஞ்சள் குங்குமம் எல்லாம் வைச்சு...அழகு பாத்தாருங்க... ஏன்னா அந்த காட்சியால தான் அவர் பொழப்பே ஓடுது. காமாட்சி தர்ற பாலை வைத்து தான் மாரிமுத்து பொழப்பு நடத்துறார்.

அட இருங்க இருங்க இது மாரிமுத்து கதையில்லை, காமாட்சி யோட கதை.   ஆமாங்க முதலில் காமாட்சி எங்க இருந்தது..என்ன செய்தது அதப்பத்தின கதை.

மாரிமுத்து..காமாட்சிக்கு அலங்காரம் செய்து முடிச்சி ஏய்..என அதட்டினார்...காமாட்சி ஏதோ நினைவில் நின்று கொண்டு இருந்தது. காமாட்சி முதுகில் ரெண்டு போட்டு மீண்டும் ஏய் என்றார்.. மாரிமுத்து..உடனே தன் நினைவை உணர்ந்து கொண்டு நடந்து சென்றது.. வீட்டிற்கு வந்ததும்..மாரிமுத்து தன் வேலையை தொடர்ந்தார்...இந்த காமாட்சி ரெண்டு வேளை இருபது லிட்டர் பால் தருது என சந்தோசமாக சொல்லி கொண்டே பால் கறந்து கொண்டு இருந்தார்...

காமாட்சி நினைவெல்லாம் தன் பழைய வாழ்க்கையில் இருந்தது. நான் எப்படி எல்லாம் இருந்தேன் என நினைத்து பார்த்து கொண்டு இருந்தது . காட்டில் தன் நண்பர்களோடு ஜாலியா காட்டை எப்படி எல்லாம் சுற்றி கொண்டுயிருந்தேன் இப்போது...ஒரு அடிமை போல் ஆகிவிட்டேன்...இந்த நிலைமைக்கு காரணம் அந்த மணி தான் ....


அந்த காட்டில் சிங்கம் புலி எல்லாம் கிடையாது அனைத்தும் அழிந்து போய் விட்டது மாடுகளின் ராஜ்ஜியம் தான் அந்த காட்டில் நான்கு மாடுகள் அவைகள் இணைபிரியாத நண்பர்களாக சுற்றி கொண்டு இருக்கும். ராஜன் கோபி முகில், சந்துரு, என நான்கு நண்பர்கள்..இவர்களை பார்த்தால் அந்த காட்டில் அனைவருக்கும் சிறிது பயம் ஏற்படும் அது இவர்களின் வீரமும் ஒற்றுமையும், அதில் ராஜன் எப்போதும் எதிர்காலம் பற்றி சிந்தித்து கொண்டு இருக்கும், முகில்க்கு எப்போதும் எந்த கவலையும் இல்லாமல் சுற்றி கொண்டு இருக்கும், கோபி எங்காவது சாப்பாடு கிடைக்குமா என பார்த்து தன் நண்பர்களை கூப்பிட்டு செல்லும், அதை தவிர கோபிக்கு ஒன்றும் தெரியாது, இவை அனைத்தையும் இப்போது தான் சந்துரு கற்று வருகிறான்.

ஒரு நாள் கோபி ஊர் சுற்றி விட்டு வந்து கொண்டு இருந்தது "ஒரு மூன்று கிலோ மீட்டர் அந்த பக்கம் நல்ல உணவு இருக்கிறது அங்கு சென்றால் நல்லா சாப்பிட்டு வரலாம்" என்றது கோபி, அதற்கு முகிலன், "மூன்று கிலோ மீட்டர் எல்லாம் என்னால் வர முடியாது இங்கே நல்ல பழம் காய்கறி கிடைக்கிறது நான் வரவில்லை" என்றது,  ஒரு வழியாக ராஜனும் சந்துருவும் சமாதானப் படுத்த வருவதற்கு சம்மதம் சொன்னது, முகில்..நான்கு மாடுகளும் நன்றாக சாப்பிட்டு வந்து கொண்டு இருந்தது, கோபி யோசித்து கொண்டே வந்தது "நாம் மட்டும் போய் தனியா சாப்பிட்டு வந்து இருக்காலம்" முகில் உடனே சொன்னது "நீ என்ன யோசிக்கிறாய் எனக்கு புரிகிறது...தனியா வந்து இருந்தா அடிமாடா போய் இருப்பே..ஒழுங்கா வா போகலாம்" என்றது ...

அவ்வழியே சென்று கொண்டு இருக்கும் போது தான் மணி ஒன்று கிடைத்தது..அதை சந்துரு எடுத்து பார்த்து கொண்டு இருந்தது..அப்போது எழுந்த மணியின் ஓசை கேட்டு பறவைகள் பறந்தன, மான்கள் துள்ளி குதித்து ஓடியது, நரிகள் பயந்து நின்று கொண்டு இருந்தது...இதை பார்த்த கோபி முகில் ஓடி வந்து பார்த்தது, முகில் ராஜனை கூப்பிட்டு இங்கே வந்து பார் என்ன இது என்றது, ராஜனுக்கு தான் அனைத்து தெரியுமே ...உடனே அதை பற்றி விளக்கியது..உடனே சந்துருவுக்கு ஒரு யோசனை தோன்றியது, அதை ராஜனிடம் சொன்னது" இந்த மணியின் ஓசை கேட்டு அனைத்து விலங்குகளும் பயப்படுகிறது" "இதை நீ கழுத்தில் அணிந்து கொண்டால் இந்த காட்டுக்கே நீ தான் ராஜா"..!!! ராஜனுக்கு அதில் விருப்பமேயில்லை ..

சந்துரு சொன்னது கோபியிடம். நீயும் சொல் அப்போது தான் ராஜன் ஏற்றுக் கொள்ளும், கோபி, முகிலன் சந்துரு ,என மூவரும் சொல்வதால் ராஜன் ஏற்றுகொண்டது ,அந்த மணியை சந்துரு கட்டி விட்டது.


அந்த மணி கட்டிய பிறகு ராஜனுக்கு தனி மரியாதை. அதை பார்த்த முகிலனுக்கு கொஞ்சம் ஆசை வர ஆரம்பித்தது, நாம் சென்றால் நமக்கு யாரும் மரியாதை தருவதில்லை ஆனால் இந்த ராஜனுக்கு மட்டும் இப்படி மரியாதையா? என்றது, கோபியிடம் சென்று "இந்த ராஜனிடமிருந்து இந்த மணியை பறிக்க வேண்டும். அந்த மணியை நான் அணிந்திருந்தால் இந்த காட்டையே மாற்றி காண்பித்து இருப்பேன்" கோபி உடனே "காட்டில் என்னடா மாற்றம் செய்ய போறே"? ராஜன் உன்னை என்ன செய்தான்...??"அந்த மணி வந்தது முதல் நீ சரியில்லை" என்றது கோபி, அந்த மணியை எப்படியாவது பறிக்க வேண்டும் என திட்டம் தீட்டியது...அப்போது பேசிக்கொண்டு இருந்த போது சந்துருவும், ராஜனும் வந்து கொண்டுயிருப்பதை பார்த்து பேச்சை நிறுத்தியது முகிலன் ...

இரவு முழுவதும் உறங்காமல் முகிலன் ஏதேதோ திட்டம் திட்டி கொண்டு இருந்தது. ராஜனிடம் சில நரிகள் சதித்திட்டம் தீட்டி கொண்டு இருப்பதாக சொன்னால் போதும் வந்துவிடும்..அதை எங்காவது பள்ளத்தில் தள்ளி விட்டு விடலாம் என்று முடிவு செய்தது. மறுநாள் காலை விடிந்தவுடன் முகிலன் ராஜனிடம் நரி கதையை சொல்லி கொண்டுயிருந்தது, "வா ராஜன் நாம் போய் அந்த நரிகளை என்னவென்று கேட்டு வருவோம்" என்றது, அப்போது சந்துருவுக்கு சந்தேகம் வர..ஏன் ராஜனை மட்டும் தனியாக அழைத்து செல்கிறாய்..?? நானும் வருகிறேன் என்றது சந்துரு. 

நீ வேண்டாம் நாங்கள் போகும் இடம் பிரச்சனையானது ஏதாவது ஆபத்து என்றால் நாம் எல்லாம் ஒன்றாக மாட்டி கொள்வோம் நீ இங்கேயே இரு நாங்கள் சென்று வருகிறோம் என சொல்லி ராஜனை அழைத்து சென்றது முகிலன்.


மிக தொலை தூரத்துக்கு அழைத்து சென்றது...இன்னும் எவ்வளவு தூரம் இருக்கிறது என்று ராஜன் கேட்டது? .."இதோ வந்து விட்டது இந்த மலையை தாண்டினால்...வந்துவிடும்" என்றது மலையை தாண்டி கொண்டுயிருக்கும் பொழுது பின்னால் இருந்து ராஜனை தள்ளி விட்டது முகிலன். இதை சற்றும் எதிர்பார்க்காத ராஜனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ராஜனை தள்ளி விட்டு கழுத்தில் இருந்த மணியை பறித்தது...!!!

முகிலன் மட்டும் தனியே வருவதை பார்த்து சந்துரு ஓடி சென்று ராஜன் எங்க...? என்றது .."ராஜன் பக்கத்து காட்டிற்கு சென்றுள்ளது அது வர ஐந்து நாட்கள் ஆகும்" என்றது. "ஓஓ  அப்டியா நான் அந்த பக்கத்து காட்டிற்கு சென்று பார்த்து விட்டு வருகிறேன்" என்றது முகிலன்,  தடுத்து "ராஜன் உன்னை வரவேண்டாம் என்று சொன்னார் இங்கே இருந்து பாத்துக்க சொன்னார்" என்று முகிலன் சொன்னது. சரி என சந்துரு அமைதி காத்தது.

கோபி வரும் பொழுது மணியை எடுத்து வந்து ராஜன் மணி போல் அங்கு ஒன்று கிடைத்தது..."நீ தான் ராஜன் மணிக்கு ஆசை பட்டாயே  இப்பொழுது இதை நீ வைத்து கொள்" என்றது கோபி, "என்ன ராஜன் மணிக்கு ஆசை பட்டாயா"..?? எங்கே அந்த மணியை காட்டு என்று சந்துரு ...இது ராஜனின் மணி ...!!

"முகிலா ஒழுங்கா உண்மையை சொல்" ராஜன் எங்கே..?? கோபியும் ராஜன் எங்க என்றது..??  முகிலனின் கோவத்தில் அனைத்து உண்மையும் வெளியில் வந்தது...இங்கே இருக்கும் அனைவரும் ராஜனுக்கு தான் மரியாதை தருகிறார்கள்..என்னை நீங்கள் கூட மதிப்பதில்லை எல்லாவற்றிக்கும் அந்த மணி தான் காரணம்...அந்த மணி இருந்தால் நீங்க எல்லாம் எனக்கும் மரியாதை தருவீர்கள் அல்லவா அதனால் தான் அப்படி செய்தேன். "அதற்காக ஒரு நண்பனையா இப்படி செய்வாய்" "அப்போது ராஜனை என்ன தான் செய்தாய்"?? ஒரு பள்ளத்தில் தள்ளிவிட்டுவிட்டேன் என்றது.... !!!

மரியாதைக்காக நண்பனையே இழக்கும் அளவுக்கு துணிந்தவன் நாளை நீ என்ன வேண்டும் என்றாலும் செய்வாய்...உங்கள் நடப்பே எனக்கு தேவையில்லை..!!! என சந்துரு கூறியது...நான் தனியாக போகிறேன்... கோபி நீ என்னுடன் வருகிறாயா...?? என்றது சந்துரு, கோபி தயக்கத்தோடு நின்று கொண்டு இருந்துதது... சிறிது நேரத்திற்கு பிறகு சந்துரு தனியே சென்றது...ஊர் ஓரத்தில் உள்ள காட்டில் சிறிது நாட்கள் இருந்தது..

அதை பார்த்த மாரிமுத்து தன் வீட்டிற்கு அழைத்து சென்று விட்டார் பின்பு சந்துரு காமட்சியாக பெயர் மாறியது ...ஒரு மணியால் தன் நட்பு வட்டம் பிரிந்ததை எண்ணி தினமும் வேதனை பட்டு கொண்டு இருந்தது சந்துரு. ....

மதியவேளையில் உணவு அருந்தி கொண்டு இருந்த சந்துரு தனக்கு நன்கு தெரிந்த மாட்டின் குரலை கேட்டு திரும்பி பார்த்தது..... 
     

Monday, January 17 27 comments

இவள் போலே யாரும் இல்லை ll




ஆயிரம் கனவுகளுடன் இருந்தாள்.. திருமணத்திற்கு பிறகு வேலைக்கெல்லாம் போகாமல் குழந்தை பெற்று கொண்டு அதை நன்றாக வளர்க்க வேண்டும் என்று எண்ணி கொண்டு இருந்தாள்....கனவு வெறும் கனவாகவே போக போகிறது என்று தெரியாமல் ...இதுவரை... 


ஜெயந்தியின் வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்தது. திருமணம் முடிந்து ஐந்து மாதங்கள் ஓடியது ....கணவனும் மாமியாரும் அவள் மேல் அன்பாகவே இருந்தனர். ஆனால் அவளுக்கு இன்னும் குழந்தை உண்டாகவில்லையே என்ற வருத்தம் இருந்தது. சமீபத்தில் அம்மா, அப்பா ஃபோன் செய்தபோது கூட ஏதாவது விசேஷம் உண்டா என கேட்டார்கள்.

ஜெயந்தியின் மாமியார் வெளியே சென்று விட்டு கோபமாக வீட்டுக்கு வந்தார்..

"என்ன அத்தை என்ன ஆச்சு?" இல்லை ஜெயந்தி நான் கடைக்கு போயிட்டு வரும் பொழுது என்னை ஒருத்தி பார்த்து கேக்குறா... என்ன இன்னும் உன் மருமக உண்டாகலையா...?உன் பையனுக்கு பிறகு தான் என் பையனுக்கு கல்யாணம் ஆனது.. ஆனால் இப்பொழுது என் மருமக மாசமா இருக்கிறா என்று என்னை கேட்குறா...அதான் கோவம் வந்துடுச்சிம்மா...இதை கேட்ட உடன் மெளனமானாள். "ஜெயந்தி உனக்கு கல்யாணம் ஆகி ஐந்து மாதம் தானே ஆகுது அதுக்குள்ள ஏன் இவங்க எல்லாம் இப்படி பேசுறாங்கன்னு தெரியலை" ...இதுக்கு தான் கடைக்கு போனால் யாரிடமும்
பேச கூடாது.... சரி ஜெயந்தி நீ போய் சமையல் செய்.

தன் மாமியார் தன்னை எதுவும் குறை சொல்லவில்லை என்றாலும் தனக்கு குறை இருக்குமோ என்று நினைத்து கொண்டாள்...


நாட்கள் ஓடின ஒரு வருடம் ஆனது இன்னும் குழந்தை பிறக்கவில்லையா என்று கேட்பவர்களிடம் பதில் சொல்ல முடியாமல் தவித்தாள் ஜெயந்தி...தன் கணவர் வேலையை விட்டு வந்தவுடன் தன் ஏக்கத்தை கூறி அழுதாள் "ஏதாவது செய்ய வேண்டும் எனக்கு நல்ல மாமியார் கிடைத்து இருக்காங்க அவங்க ஆசையை நான் நிறைவேற்றவேண்டும் ஏதாவது நல்ல மருத்துமனைக்கு சென்று நாம் சோதனை செய்து கொள்ளுவோம் நீங்க என்ன சொல்றிங்க"...சிறிது தயக்கத்திற்கு பிறகே சரி என்றான்.


மறுநாள் ஒரு மருத்துவரை சந்தித்து இருவரும் சோதனை செய்து கொண்டனர். இரண்டுநாள் கழித்தே சோதனை முடிவு தருவோம் என்று கூறிவிட்டார்கள். ஜெயந்தி நாம் இரண்டு நாள் கழித்து வாங்கி கொள்வோம் என ஜெயந்தியும் விக்னேஷும் பேசிக்கொண்டு வந்தார்கள்...


இரண்டு நாட்கள் கழித்து ...

வேலைக்கு சென்றிருந்த விக்னேஷிற்கு போன் செய்தாள். "ஏங்க இன்று அங்கே போய் ரிசல்ட் வாங்கவேண்டுமே நீங்க வரவில்லையே....?". இல்லை ஜெயந்தி எனக்கு வேலை அதிகம் இருக்கிறது நீ போய் வாங்கிட்டு வா..

சரிங்க...நான் போயிட்டு வந்து சொல்றேன் 


சந்தோசமாக தன் அத்தையிடம் சொல்லி விட்டு கிளம்பிச் சென்றாள். மருத்துமனைக்கு உள்ளே நுழையும் இடத்தில் ஒரு சிறிய கோவில் இருந்தது அங்கே சாமி கும்பிட்டு விட்டு உள்ளே சென்றாள்...ரிசல்ட் கவரை ஜெயந்தியிடம் கொடுத்தார்கள் என்ன இருக்கிறது கொஞ்சம் படித்து சொல்லுங்க என்றாள். அவர்கள் படித்து விட்டு இந்த பெண்ணிற்கு இனி குழந்தை பிறக்காது அவர் கர்ப்பபையில் கட்டி இருக்கிறது அதை ஆபரேசன் செய்து எடுக்க வேண்டும்...என்கிறார்கள். ஜெயந்தி தலையில் இடி விழுந்ததை போல இருந்தது இந்த செய்தி...ஒரு நடை பிணமாய் நடந்து வந்துகொண்டு இருந்தாள்...மருத்துவமனை வாசலில் இருந்து சாமி இவளைப்பார்த்து சிரிப்பது போல இருந்தது....வீட்டிற்கு செல்ல சாலையை கடக்க முயற்சி செய்தாள் ...அப்போது தன்னிலை மறந்து சென்ற அவளை ஒரு லாரி தூக்கி எரிந்தது..அவள் உயிர் பிரிந்தது....



அவளின் தொலைபேசி அடித்து கொண்டு இருந்தது அழைப்பவர் விக்னேஷ் என்ன ஆனது என்று கேட்பதற்காக காத்து கொண்டு இருந்தான்...யாரோ ஒருவர் அந்த போனை எடுத்து இங்க வந்தவருக்கு விபத்து நடந்து விட்டது என்கிறார் பதறி அடித்து ஓடி வருகிறான், விக்னேஷ்ற்கு அவளை அந்த நிலைமையில் பார்த்தவுடன் என்ன செய்வது என்றே தெரியவில்லை..அவளை கையில் இருந்த ரிசல்ட் கவரை பிரித்து படித்து பார்த்தான்..படித்ததும் தலையில் அடித்து கொண்டு அலறினான்...அதில் ஜெயந்தி என்ற பெயருக்கு பதில் ஜெயம் என்றிருந்தது. ரிசல்ட் மாறிவிட்டதை உணர்ந்து மேலும் கதறி அழுதான். ஒரு வேனில் அவளை எடுத்து கொண்டு அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர் ..பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது ஜெயந்தி ஒரு மாத கரு அவள் வயிற்றில் வளர்ந்து இருப்பதாக கூறினார்கள்....குழந்தை வேண்டும் குழந்தை வேண்டும் என்றாய் இப்போது உன் வயிறில் குழந்தை உருவாகிவிட்டது இப்போது நீ இல்லையே .....என கதறினான் ....


Thursday, January 13 38 comments

இவள் போலே யாரும் இல்லை...!





நன்றாக உறங்கி கொண்டுயிருந்தாள் ஜெயந்தி....நேரம் 8 மணி ஆகுது இன்னும் என்ன தூக்கம் என்று குரல் கொடுத்து கொண்டே வந்தார் ஜெயராம்...ஜெயந்தியின் அப்பா....

விடுங்க அவ தூங்கட்டும் இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் காலை 8 மணி வரை தூங்குறா இல்லையென்றால் பாவம் குழந்தை காலையே எழுந்து காலேஜ்க்கு போய்டுவா விடுங்க...என்றாள் ஜெயந்தியின் அம்மா...

இல்லை உமா நீ மட்டும் சமையல் வேலை எல்லாம் செய்து கொண்டு இருக்கே உனக்கு அவ வந்து உதவி செய்வா அதான் எழுப்பினேன்...

பரவாயில்லைங்க அவளே கொஞ்ச நாளைக்கு தான் நம்ம வீட்டில் இருப்பா ...பிறகு கல்யாணம் ஆனா அங்கே போய்டுவா எங்களுக்கு எல்லாம் பிறந்தவீட்டில் இருக்கும் வரை தான் சந்தோசம்....

உமாவை முறைத்துப் பார்த்தார் ஜெயராம்.... முகத்தை திருப்பி கொண்டு வேலையை தொடர்ந்தாள்...

திடீர் என்று பக்கத்து வீட்டில் இருந்து ஒரு குழந்தை அழுது கொண்டே ஜெயந்தி வீட்டிற்கு ஓடி வந்தது ஜெயந்தியின் அம்மா அழுகாதே அக்கா தூங்குறா....

"என்னம்மா சத்தம்" என்று கண்விழித்தாள் ஜெயந்தி 

"பார் உன்னால் அக்கா எழுந்து விட்டா"...

"விடுங்க அம்மா பரவாயில்லை" என அந்த குழந்தையை வாங்கி தன் அருகில் படுக்க வைத்து கொஞ்சி கொண்டு இருந்தாள்...ஜெயந்திக்கு குழந்தைகள் என்றால் ரொம்ப பிடிக்கும் பக்கத்து வீட்டு குழந்தையுடன் விளையாடி கொண்டு இருப்பாள்.

************************

மறுநாள் அம்மா நான் காலேஜுக்கு போயிட்டு வரேன் அம்மா இன்று கல்லூரியில் நிறைய போட்டிகள் இருக்கிறது அதனால் நான் வருவதற்கு லேட் ஆகும் என சொல்லி விட்டு கல்லூரிக்கு சென்றாள்..கல்லூரியில் தோழிகள் காத்திருந்தனர்... வா ஜெயந்தி "ஏன் இவ்வளவு நேரம்" போட்டி ஆரம்பித்து விட்டார்கள்...."ஏய் ஜெயந்தி எப்போதும் நீ தானே முதலில் வருவாய்" இந்த முறை பார் நான் உன்னை விட அதிக பரிசு வாங்குகிறேன் என்றாள் ஒரு தோழி.

பேச்சு போட்டி ஓட்டபந்தயம், போட்டிகளில் இரண்டு பரிசு மட்டுமே வாங்கினாள்...ஒரு போட்டியில் தோல்வி அடைந்ததால் சில தோழிகள் கிண்டல் செய்ய அதை தாங்காமல் ஜெயந்தி கையை வெட்டி கொள்ள முயன்றாள் ஒரு தோழி வந்து என்ன பண்றே ஜெயந்தி இதுக்கு போய் கையை அறுத்து கொள்வார்களா...இந்த போட்டியில் வெற்றி பெற வில்லை என்றால் அடுத்த போட்டியில் நீ வெற்றி பெறுவாய் இப்படி நீ இருக்காதே...ஏமாற்றத்தை தாங்க கூடிய சக்தி உனக்கு இருக்கணும் இது போல இனி நீ செய்ய கூடாது சரியா என தோழிகள் கூறினார்கள்

**********************
சில நாட்களுக்கு பிறகு 

ஜெயந்தியின் அப்பா மதிய சாப்பாட்டிற்கு வேலையை முடித்து விட்டு வந்தார்... 
வாங்க சாப்பாடு எடுத்து வைக்கவா

எடுத்துவை உன்னிடம் ஒரு விஷயம் சொல்லணும் 

சாப்பாட்டை எடுத்து வைத்து விட்டு என்ன விஷயம் சொல்லுங்க...என்றாள்

நம்ம ஜெயந்திக்கு ஒரு நல்ல இடத்தில் வரன் வந்து இருக்கு, நல்ல இடம் பையன் நல்லா படித்து இருக்கார் வசதியான குடும்பம். நீ என்ன சொல்றே பேசி முடிக்கலாமா..?

அது சரிங்க...ஆனா ஜெயந்தி படிச்சிட்டு இருக்காளே 

அதான் இந்த வருடம் படிப்பு முடிய போகுதே கல்யாணம் செய்து முடிப்பதற்கும் படிப்பு முடிவடைவதற்கும் எல்லாம் சரியா இருக்கும் ....

சரிங்க ஜெயந்தி வந்தா நீங்களே சொல்லுங்க 

மாலை கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்தாள்....சிறிது நேரத்திற்கு பிறகு தயங்கி கொண்டே ஜெயந்தியின் அப்பா பேசுவதற்கு தயங்கினார் என்ன அப்பா சொல்லுங்க 

உனக்கு ஒரு வரன் வந்து இருக்கு..நீ சம்மதம் சொன்னா மேற்கொண்டு பேசுவேன் அதான் கேக்குறேன் நீ என்னமா சொல்றே..?


சிறிது நேரம் அமைதியாக இருந்தாள் ஜெயந்தி....என்னப்பா சொல்றிங்க நான் இப்போது படித்து கொண்டு இருக்கிறேன்...நான் மேற்கொண்டு படிக்கவேண்டியது இருக்கு இப்போது எதற்கு அப்பா அவசரம்..?

இல்லமா நல்ல இடம் அதுமட்டும் இல்லாமல் அவங்க கல்யாணத்திற்கு பிறகு உன்னை படிக்க வைக்கிறேன் அப்படின்னு சொல்றாங்க...மாப்பிள்ளை வீட்டில் பேசி உன்னை மேல் படிப்பு கூட படிக்க வைக்க சொல்றேன்...சரின்னு சொல்லும்மா...

சரிங்கப்பா உங்களுக்கு எது விருப்பமோ அதையே செய்யுங்க என்று அரை மனதுடன் கூறினாள்...

அரைமனதுடன் திருமணம் சம்மதம் என்றாலும் மாப்பிள்ளையை பார்த்தவுடன் ஜெயந்திக்கு பிடித்து விட்டது...

ஆயிரம் கனவுகளுடன் இருந்தாள்.. திருமணத்திற்கு பிறகு வேலைக்கெல்லாம் போகாமல் குழந்தை பெற்று கொண்டு அதை நன்றாக வளர்க்க வேண்டும் என்று எண்ணி கொண்டு இருந்தாள்....கனவு வெறும் கனவாகவே போக போகிறது என்று தெரியாமல் ...



முடிவு அடுத்த பதிவில்.... 




 
;