Saturday, June 30 9 comments

சகுனி கார்த்திக்கு எதற்கு பவர் ஸ்டார் வேலை..??




ஒரு நல்ல படம் பார்க்கும் பொழுதே அந்த படத்தை பற்றி பதிவெழுத வேண்டுமென்று தோன்றும். அப்படி வழக்கு எண் பார்க்கும் பொழுது தோன்றியது ஆனால் அனைவரும் வழக்கு எண் பற்றி நிறைய எழுதிவிட்டார்கள் நாமும் ஏன் எழுத வேண்டுமென்று விட்டுவிட்டேன். 

ஆனால் சகுனி படம் பார்க்கும் பொழுது இந்த படத்திற்கெல்லாம் ஒரு விமர்சனமா என்ன தோன்றியது, படம் அந்த அளவிற்கு இருந்தது, படம் நன்றாக இல்லையென்றாலும் பொறுத்து கொள்ளலாம் ஆனால் இவர்கள் படத்திற்கு கொடுக்கும் பில்டப் பார்த்து பொறுக்கமுடியவில்லை

நல்ல படங்களை யெல்லாம்  மக்கள் கண்டு கொள்ளாமல் இருந்து விடுகிறார்கள் சகுனி படத்தில் ஒரு வசனம் சொல்வார் கார்த்திக்.. சிப்ஸ் பாக்கெட்டில் காற்று அடைத்து விற்பனை செய்வது போல் மார்கெட்டிங் செய்ய வேண்டுமென்று அது போல் தான் இந்த படத்திற்கும் மார்கெட்டிங் செய்து கொண்டிருகிறார்கள். 

சகுனி எந்திரன் வசூலை முந்திவிட்டதாக சொல்கிறார்கள், முன்பு ஏழாம் அறிவு எந்திரன் வசூலை முந்தியதாக கூறினார்கள் இப்போது சகுனி...அப்படியென்றால் ஏழாம் அறிவு படத்தின் சாதனையை முறியடித்தது என்று தானே சொல்ல வேண்டும்...

படத்திற்கு இப்படி பில்டப் கொடுத்து தற்போதைய படத்தை ஓட்டி விடலாம் ஆனால் அடுத்தடுத்து வரும் கார்த்திக்கின் படங்களை எப்படி ஓடும்... நல்ல படமாக இருந்தாலும் ஓடாதே...!!  சன் பிக்சர்ஸின் நல்ல  படங்கள் தோல்வி அடைந்ததற்கு காரணம் ஓடாதா படங்களுக்கு கொடுத்த அதிக பில்டப் தான். 

வழக்கு எண்   போன்ற நல்ல படங்கள் எல்லாம் திரையரங்கை விட்டு தூக்கப்படுவதற்கு காரணம் சினமாகாரர்கள் தான். அதிக திரையரங்கை வாடகைக்கு எடுத்துகொள்கிறார்கள், நல்ல படங்கள் ஒதுக்கப்படுகிறது... வழக்கு எண் படத்திற்கு பிறகு வந்த படங்களிலே தடையற தாக்க நன்றாக இருந்தது ஆனால் அந்த திரைப்படத்தை யாரும் கண்டு கொண்டதாய் தெரியவில்லை..    

மார்கெட்டிங் உலகத்திற்கு நாம் சென்று விட்டோம் அதனால் தான் எல்லாம் மார்கெட்டிங் என்ற பெயரில் நம்மை ஏமாற்றி கொண்டிருகிறார்கள்....    சரி சரி சகுனி படத்தை பற்றி ஒரு பத்தியாவது எழுதுவோம்..

சகுனியின் கதை அப்படி ஏதாவது இருக்கா...?? தன் வீட்டு அருகே சுரங்கப்பாதை அமைப்பதற்காக அரசு கார்த்திக்கின் வீட்டை கையகப்படுத்துகிறது அரசிடம் இருந்து எப்படி கார்த்திக் தன் வீட்டை மீட்கிறார் என்பதே படத்தின் கதை.  மணிரத்தினம் போல் மகாபாரதத்தை உல்ட்டா செய்து எடுத்திருந்தால் கூட பரவாயில்லை.. ஆனால்  சகுனின்னு சொல்லி கார்த்திக்கும் சந்தனமும் சேர்ந்து போடுற மொக்கை போடுறாங்க போடுறாங்க இடைவேளை வரை மொக்க போட்டுட்டே இருக்காங்க.. 

இடைவேளைக்கு அப்பறம் என்ன செய்வார் பார்த்தா. அப்படி ஒன்னும் பெரிதாக  செய்யவில்லை  கவுன்சிலர் தேர்தல் வருது அதில் ராதிகாவிற்கு ஐடியா கொடுத்து அவர் வெற்றி பெறுகிறார்..  இவர் ஐடியா கொடுக்க  எதிர்க்கட்சி தலைவர்  முதல் அமைச்சர் ஆகிறார் சாதாரண சாமியார்க்கு  ஐடியா கொடுத்து அவரை மிகப்பெரிய சாமியாரை  மாற்றுகிறார் (சத்குரு ஜக்கி வாசுதேவ் போல்) இப்படி பலருக்கும் யோசனைகளை சொல்லி சொல்லி அவர்களை வெற்றி பெற வைக்கிறார்.. இது தான் சகுனி தனமாம்..!!


அது எப்படி தேர்தல்கள் வந்து கொண்டே இருக்கிறது..?? பல லாஜிக் மீறல்கள் தூள் படத்திலும் இதே கதை தான் ஆனால் அதில் ஒரு அமைச்சரை எப்படி பழி வாங்க முடியும் என்பது ஏற்று கொள்ளும் வகையில் இருந்தது ஆனால் சகுனியில் சொல்லப்படும் காட்சிகள் ஏற்று கொள்ள கூடியதாகயில்லை..  
படத்தின் பாடல்களும் சொல்லும் விதமாய் இல்லை சிறுத்தையின் பாதிப்பு படத்தின் பாடலில் தெரிகிறது மனசெல்லாம் மழையே பாடல் மட்டும் மனதை நனைய வைக்கிறது 

சகுனியில் கார்த்திக் சற்று சறுக்கி இருக்கிறார் அவர்கள் உறவுகாரர்களே படத்திற்கு தயாரிப்பாளர்கள் என்பதால் அதிக பில்டப் கொடுத்து கொண்டிருகிறார்கள்... சகுனி தோல்வி அடைந்ததை யாரும் பெரிது படுத்தியிருக்க மாட்டார்கள் ஆனால் இவர்கள் கொடுத்த பில்டப் தான் தோல்வியை பற்றி இப்படி பேசி வைக்கிறது.  


படம் நன்றாகயிருந்தால் பார்க்கப்போகிறோம் இல்லையென்றால் எங்கள் வேலையை பார்த்து கொண்டு போக போகிறோம் அதை விட்டு விட்டு வசூல் சாதனை என்று சொல்லி ஏன் எங்களை வேதைனை படுத்த திரைக்கு அழைக்குறீர்கள்..??  கார்த்திக்கிற்கு எதற்கு பவர் ஸ்டார் வேலை..??  

Monday, May 21 4 comments

சிறகடிக்கிறேன்...



உன்னை காணவே சிறகடிக்கிறேன் 
என்னை காண துடிப்பதை அறியாமல்... 
தேடி தேடி களைத்து 
கிளையில் அமர்கையில்... 
எங்கிருந்தோ வந்து
உன் அலகால் அழகுசேர்த்து 
களைப்பாற்றுகிறாய்...!


விழுந்து கொண்டிருக்கிறேன் 
ஒவ்வொரு துளியாய்.. 
உன் பூமி நெஞ்சை கிழித்து செல்கிறேன்
ஒவ்வொரு துளியாய்.
காணமல் கரைந்தே போகிறேன் 
ஒவ்வொரு துளியாய் 
உன் நெஞ்சில் ஈரம் கொள்ள 
மீண்டும் பிறக்கிறேன் ஒவ்வொரு துளியாய்...!


காதல்  உன்  நெஞ்சில்  துடிக்க 
என் இதயத்தை   தருகிறேன் 
துடிக்காத  உன்  இதயத்தை  கொடு 
துடிக்கவைகிறேன்..! 



வெறிச்சோடிய பாதைகள் 
சப்தமில்ல அலைகள்..
சப்தமில்ல காற்று..
சப்தமிடும் சப்தமில்ல அலைபேசி 
சாலையோர பூக்களின் மழை..
யாவும் தெரிவதில்லை 
உன் வருகையை
எதிர்நோக்கும் பொழுது...!! 

சரித்திரத்தில் இடம் பெற
சாதனை படைக்க வேண்டுமாம் 
அல்லது காதலிக்க வேண்டுமாம் 
வா நாம் காதலித்து சாதனை
படைப்போம்...!





Tuesday, April 17 13 comments

தண்ணி... தண்ணி...





இந்த மேனேஜர் தொல்லை தாங்க முடியலைங்க... வீட்டுக்கு கிளம்புற நேரத்துலதான் அத செஞ்சியா இதை செஞ்சியான்னு கேட்டு உயிரை வாங்குறார். ச்சே... முதல்ல இந்த ஆபிஸ விட்டு தொலைஞ்சு போகணும்... ஆபிஸ் விட்டு வரும் போது இப்படிதாங்க எப்பயும் புலம்பிட்டே வருவேன்.

வண்டிய ஸ்டார்ட் பண்றேன். ஸ்டார்ட் ஆகவே இல்லை.இந்த மேனேஜர் தான் இப்படி உயிரை வாங்குறான்னா இந்த வண்டிவேற...எப்போ பாரு இப்படிதான் மக்கர் பண்ணுது. என்னான்னு கீழே இறங்கி பார்த்தா நான் சாவியே போடல. அவசரத்துல அண்டாக்குள்ளேயே கைய விட்டாலும் உள்ள போகாதுன்னு என் மைன்ட் வாய்ஸ் வேற...  வாட்ச்மேன் வேற என்ன பார்த்து தலையிலே அடிச்சுகிட்டார்...  விடுறா.. விடுறா... சூனா பானா. நீ போயிட்டே இருன்னு வண்டிய விருட்டுன்னு கிளப்புனேன்.

செம பசி. மணி வேற 11 ஆச்சு...எங்கயாவது நம்ம சரவணபவன் இருக்கான்னு பார்த்துட்டே போனேன்.எங்க தேடியும் கடை இல்ல. என்னடா இப்படி நம்மள எல்லாரும் அலைய விடுறாங்களேன்னு நினைச்சுட்டு இருக்கும்போது ஒரு கடை இருந்துச்சு. கடை மட்டும் தான் இருந்துச்சு. ஆளையே காணோம். பக்கத்துல சுத்தி முத்தி பார்த்தா யாரும் காணோம். பசி வேற உயிர் போகுது. நம்மளே எடுத்து போட்டு சாப்பிடலாம்ன்னு கிட்ட போனா திடீர்ன்னு கிழே இருந்து ஒரு ஆள் எழுந்திருச்சு தம்பி என்ன வேணும்ன்னு கேட்க அப்படியே நான் பயந்தே போயிட்டேன்.  

நான் அப்படியே முழிச்சிட்டே நின்னுட்டு இருந்தேன். மறுபடியும் கனத்த குரல். தம்பி...இட்லி ஆவியோட இருக்கு.வேணுமா..?? என்ன ஆவியா..?? அண்ணேன்னு நான் பதற.. தம்பி இட்லி தான்.

சரிங்கண்ணா... நாலு இட்லி சால்னாவோட தாங்க... மணிய பார்த்தா 11.45. பயந்ததுல பசியே போச்சு. மணிய பார்த்து அதுக்கு மேல சாப்பாடு இறங்கலே... எப்படியோ சாப்பிட்டு வீட்டுக்கு கிளம்புவோம்ன்னு அவசர அவசரமா சாப்ட்டுட்டு இருந்தேன்

அப்போ ஒரு ஸ்கூட்டி வந்து நின்னுச்சு. ஒரு பொண்ணு அவ பாட்டுக்கு வந்தா... 2 தோசை கொடுங்க... இட்லி கொடுங்கன்னு சொல்லி கடகடன்னு சாப்பிட ஆரம்பிச்சா.

என்னடா... இந்த நேரத்துக்கு இவபாட்டுக்கு வந்து சாப்ட்டுட்டு இருக்காளே..?! எங்கயாவது கால் சென்டர்ல வேலை செய்வா போலன்னு தோணிச்சு.

அவ என்ன பார்த்து கேட்டா... என்ன நீங்க சாப்பிடலையா..?! அப்போதான் நான் சாப்பிடாம அவளையே பார்த்துட்டு நிக்குறேன்னு புரிஞ்சுது. 

இதோ அதோன்னு உளறி கைல இருந்த இட்லிய கீழே போட்டுட்டேன்.நான் இட்லிய கீழே போட அவ என்ன பார்த்து அப்படியே சிரிச்சிட்டா... அவளே எனக்காக வேற இட்லி இருக்கான்னு கேக்க கடைகாரன் இல்லைங்கன்னு சொன்னான். இவளே எல்லாத்தையும் தின்னுட்டு இன்னும் இருக்கான்னு கேக்குறா...எங்க இருந்து வந்தாளோ என் பசிய கெடுக்க.. 

சரி. வாங்க... நான் வேற இடத்துல வாங்கி தரேன்னு அவளே காச கொடுத்துட்டு என்ன கூட்டிட்டு போனா... நானும் பின்னாடியே போனேன். ரொம்ப நேரமா இல்லாத கரன்ட் திடீர்னு வந்த மாதிரி எனக்கு பசி வந்துருச்சு.. அவ வேற என்ன பார்த்து பார்த்து சிரிச்சு கடுப்பு ஏத்தினா...அவளே ஒரு ஓட்டலுக்கு கூப்பிட்டு போய் எனக்கு சாப்பாடு எல்லாம் வாங்கி கொடுத்தா..  

அவ பொறுமையா பேச்சு கொடுத்தா... ஏங்க சாப்பாடுக்கு 12 மணி வரைக்கும் சுத்துறதுக்கு வீட்டுக்கு போய் நிம்மதியா சாப்பிடலாமே..? 

நான் எப்பயும் 12 மணிக்கு மேலதாங்க வீட்டுக்கு போவேன். அதுக்குள்ள சாப்பாடு கெட்டு போய்டும். அதான் வெளிய சாப்பிடுறேன். 

ஓ... அப்படியா..?! நீங்க வெளிய சாப்பிடுறது எனக்கு நல்லதா போச்சு.

என்ன.. என்ன சொன்னீங்க..?! நல்லதா..?! ஏன் அப்படி சொல்றீங்க..??

அத அப்புறம் சொல்றேன். விடுங்க...

அப்புறமா..?? அப்போ நாம இன்னொரு தடவை சந்திப்போமா..?? 

எனக்கு ஒண்ணுமே புரியலை. யார் இவ என்ன பேசுறா... ஒரு மார்க்கமாவே இருக்காளே..?! ஒரு வேளை பேயா இருப்பாளோ..?! நைட் 12 மணிக்கு மேல சுத்துறா...
 நம்மளும்தான் 12மணிக்கு மேல சுத்துறோம். நான் என்ன பேயான்னு எனக்கு நானே கேள்வி கேட்டுட்டு அவ கூட போனேன்.    

அவ முன்னாடியே போயிட்டு வாங்கன்னு குரல் கொடுத்தா..நான் பயந்துட்டே பின்னாடியே போனேன்.. நான் மெதுவா வண்டிய ஒட்டுறதை பார்த்துட்டு அவ எனக்காக காத்திருந்தா..

என்னங்க இப்படி மெதுவா வரீங்க... வாங்க வேகமா போகலாம்.   
 
சரிங்க... வேகமாதானே... போவோமே... 

ஒரு ஐடியா. நம்ம ரேஸ் போலாமா..?!

என்ன ரேஸா..?? நான் பொம்பளைங்க கிட்ட எல்லாம் போட்டி போடுறது இல்லைங்க.

அட... பயமா இருந்தா பயம்ன்னு சொல்லிட்டு போங்க... அதுக்கு ஏன் இப்படி ஒரு பில்டப். 

என்ன... எனக்கு பயமா..?! வாங்க ரேஸ் விட்டுக்கலாம்.

அவ எனக்கு முன்னாடி சட்டுன்னு பறந்தா... இதுக்கு மேலயும் நாம சும்மா விட கூடாதுன்னு நானும் வண்டிய வேகமா ஓட்டினேன்.

அவ முன்னாடி போக... நான் முன்னாடி போக... இப்படியே போயிட்டு இருக்கும் போது எங்களுக்கு நடுவுல ஒரு லாரி வந்துருச்சு. அவ அத பாக்காம நேரா லாரிய நோக்கியே போனா... நான் தடுக்கலாம்ன்னு பின்னாடியே வேகமா போனேன்.எங்க ரெண்டு பேரையும் லாரி அடிச்சு தூக்கிருச்சு.

தண்ணி தண்ணின்னு முணங்கிட்டே இருந்தேன்.யாரோ சிரிக்குற சத்தம் கேட்டுச்சி... யாருன்னு பார்த்தா என் கூட வந்த பொண்ணு.அவ பின்னாடி பார்த்தா பிரியா கண்ணீர் அஞ்சலின்னு போட்டு இருந்துச்சு...  எனக்கு ஒண்ணுமே புரியல... நான் தண்ணி தண்ணி முணங்கிட்டே இருந்தேன். 

அப்போ தான் ஒரு குரல் கேட்டுச்சு... டேய்... தண்ணிய எடுத்து குடிச்சிட்டு படுடான்னு.... 

அது எங்க அம்மா குரல்.

நான் படுக்கைய விட்டு எழுந்து தண்ணிய குடிச்சிட்டு மறுபடியும் போய் படுத்துட்டேன்.

Tuesday, March 13 8 comments

மரணங்கள் சில...







நான் பார்த்த மரணங்கள் பற்றி பதிவு எழுதவேண்டுமென்று நெடுநாளாய் யோசித்து வைத்திருந்தேன்.மரணம் பற்றி பதிவு எழுத போகிறேன் என நண்பர்களிடம் கூறியதற்கு.. அப்படியெல்லாம் பதிவு வேண்டாம் என்றார்கள். ஆனால் எனக்கு எழுதவேண்டுமென்றே தோன்றியது. மரணம் பற்றி பேசுவதற்கு நாம் ஏன் பயப்பட வேண்டும்..? என்றோ ஒரு நாள் மரணம் நம்மை நேசம் கொள்ளத்தான் போகிறது... பிறகு என்ன..பேசுவதற்கு தயக்கம் ?? 


தூங்கிகொண்டிருக்கும் பொழுதே நம் உயிர் பிரிந்து விட வேண்டும். நோய் நொடி இல்லாத மரணம் நிகழ வேண்டுமென்பது நம்மில் பலரது ஆசையாக இருக்கும். மரணம் கூட ஒரு வகை வரம் தான். நம் கண்முன்னே நிகழும் மரணங்கள் எப்போதும் மறக்க முடியாத நிகழ்வாய் மாறிவிடும். அப்படி எனக்கு முன் நடந்த நிகழ்வுகளை உங்களிடமும் பகிர்ந்து கொள்கிறேன்.வாருங்கள்...


நான் சந்தித்த நிகழ்வுகளை கூறும் முன் என் தாத்தாவின் அப்பா இறந்த கதை பற்றி சொல்கிறேன். எங்கள் தாத்தா எங்களிடம் அடிக்கடி கூறிய கதை இது. எங்கள் தாத்தாவின் அப்பா மழை பெய் என்றால் மழை பெய்யுமாம். அப்படி ஒரு சக்தி அவரிடம் இருந்ததாம். தான் இறந்து போகப்போகிறோம் என்பது அவருக்கு முன்பே தெரிந்து விட்டதாம்.. நான் இத்தனை மணிக்கு இறந்து விடுவேன். அதற்குள் பசங்களுக்கு எல்லாம் சாப்பாடு போட்டு விட்டு எல்லா வேலைகளும் செய்துவிடு எனச்சொல்லி படுக்க சென்றாராம். அதே போல் அவர் மரணமும் அடைந்தாராம்... நம்ப முடிகிறதா உங்களால்..??


நம் வீட்டில் ஒரு மரணம் நிகழ்ந்தால் நம்மால் எப்போதுமே மறக்க முடியாது அல்லவா..? அப்படி ஒரு நிகழ்வு தான் இது. எங்களுக்கும் மரணம் நிகழ்ந்தால் எங்கள் தாத்தாவிற்கு வந்ததை போல் வரவேண்டுமென்று எங்கள் குடும்பத்தில் அனைவரும் சொல்லிகொண்டிருப்போம். அப்படியொரு மரணம் தான் அவரை நெருங்கியது. 


அவர் மரணிப்பதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பு கூட அவர் தொழில் மூலம் வருமானம் ஈட்டி விட்டுதான் இறந்தார். உடல் சோர்வாக இருக்கிறதென்று சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறேன் என படுக்க சென்றார். ஐந்து நிமிடம்தான் இருக்கும். மிகவும் முடியவில்லையென்றார். அன்றைய தினம் பார்த்து அனைவரும் வீட்டிலே இருந்தோம்.. அவரின் மகன்,மகள் உள்பட.. (ஒரு மகன் வெளியூரில் இருப்பதால் அவரை தவிர) ஒவ்வொரு பாகமாய் அடங்கியது. முதலில் பேச்சு.. பிறகு கண்.. என அடுத்தடுத்து..  அனைவரும் பால் ஊற்றினார்கள்.உயிர்பிரியவில்லை.. ஊரில் இல்லாத மகன் பெயரை சொல்லி பால் ஊற்றியவுடன் உயிர் பிரிந்து விட்டது. 


அவர் மரணம் சில நிமிடங்களிலே நிகழ்ந்து விட்டது.. கடைசி வரை யார் தயவின்றி 85 வயது வரை தானே சம்பாதித்து எங்களையும் வளர்த்து அவரையும் பார்த்துக்கொண்டார். அவரின் மரணம் எங்கள் கண் முன்னே இன்னும் அப்படியே நிற்கிறது.


அதற்கு பிறகு என்னை சில காரணங்களால் மருத்துவமனையில் அனுமதித்து இருந்தார்கள். அப்போது நான் கண்ட மரணங்கள் அதிகம்.. எனக்கு பக்கத்திலே அவசரசிகிச்சை படுக்கை இருக்கும். விபத்தில் அடிபட்டவர்களை அங்கே கொண்டு வருவார்கள்.தூங்கும் போது அந்த படுகையில் யாரும் இருக்க மாட்டார்கள். நடு இரவில் சப்தம் கேட்கும். என்னவென்று பார்த்தால் அந்த படுக்கையில் யாரையாவது அனுமதித்து இருப்பார்கள். மருத்துவர்கள் அந்த நபருக்கு  நெஞ்சை அழுத்திக்கொண்டு உயிர்காக்கும் சிகிச்சையில் ஈடுபட்டு கொண்டிருப்பார்கள். அந்த சப்தத்தை கேட்ட பிறகு தூக்கம் வராது. அப்படியே ஏதோ தூங்கி எழுந்து பார்த்தால் அந்த நபர் இருக்க மாட்டார். கேட்டால் இறந்துவிட்டார் என்பார்கள். அங்கு வருபவர்களில் பலர் வாகன விபத்தில் அடிபட்டுத்தான் வருவார்கள். 


நான் மருத்துவமனையிலே நெடுநாள் இருந்ததால் அங்கே என் வயதுடைய காந்தி என்ற ஒருவன் நண்பன் ஆனான்.. அவன் இருதயநோய் காரணமாக அனுமதிக்கப்பட்டு இருந்தான். சில நாள் நண்பன்தான் ஆனாலும் இன்னும் நினைவில். எல்லாம் சரியாகி விடும் என்ற ஆசையில் அறுவைசிகிச்சைக்கு சென்றான். ஆனால் திரும்பி வரவேயில்லை... மருத்துவரின் அலட்சியமே காரணமாக அமைந்தது அவன் மரணத்தில்.  அங்கு பத்து பேருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்தால் அதில் ஆறு பேர் மட்டுமே உயிர் பிழைப்பார்கள். 


நான் சமீபத்தில் கண்ட மரணம் இது.. குலதெய்வ கோவிலுக்காக ஊருக்கு சென்ற போது பார்த்தது.. ஒருவர் நன்றாக சுற்றி திரிந்து கொண்டிருந்தார். திடீரென்று கோவில் வெளியே வந்து மோர் வாங்கி குடிப்பதற்குள் இறந்து விட்டார்.. சில நொடிகளுக்குள் மரணம் நிகழ்ந்து விட்டது. 


மரணம் நமக்குள் எப்போது வேண்டுமென்றாலும் வந்து விடுகிறது... நல்ல மரணத்திற்கு கூட நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். என்னை கேட்டால் தூங்கி கொண்டிருக்கும் போதே நம் உயிர் பிரிவதுதான் நல்ல மரணம். அப்படி இறப்பவர்கள் புண்ணியம் செய்தவர்கள் என்றும் சொல்கிறார்கள்.. நம்மில் பலர் மரணத்தை நேசித்து ஏற்று கொள்வதில்லை. 


இப்படி நாம் சந்தித்த மரணங்கள் பல மறக்க முடியாததாகவே இருக்கும்.. நீங்கள் பல மரணங்களை சந்தித்து இருப்பீர்கள். அவைகளை பற்றியும் கருத்துகளிலோ அல்லது பதிவிலோ பகிர்ந்து கொள்ளுங்கள்.




யாருமில்லாத இரவு 
காற்றுமில்லா இரவு..
பற்றி எரியும் நெருப்பு 
நான் யார்...?!


காற்றில் கலந்த தேகம்.. 
கண்ணீரில் கலந்த தேகம்...
பறந்து விட்ட மூச்சை 
எட்டி பிடிக்க நினைக்கும் 
நான் யார்...?! 


நித்தம் நித்தம் . 
நிலா சோறூட்டி
வளர்த்த உன்னை 
பிண்டம் வைக்க 
வைத்த நான் யார்...?!
  
காத்திருந்து காத்திருந்து 
கருவுற்ற உன்னை 
காக்கவைத்து போன 
நான் யார்...?!


ஓய்வில்லாமல் உழைச்சு 
சிறு பிள்ளை நீ காக்க.. 
வேகத்தில் நான் செல்ல 
மரித்து போனேனே..
இனி என்றும் காணாத 
உன்னை தவிக்க விட்டு சென்ற
நான் யார்...?! 



Wednesday, February 15 10 comments

தனிமை...








தனித்துவிடப்பட்ட 
சிறகொன்று..
தன் பிம்பத்தை 
பார்த்து துள்ளி 
குதித்தது... 
தன் வழித்துணையென..!!!
*******


சிறிது சிறிதாய் 
சேர்த்த சிறகுகள்
பறந்துகொண்டிருக்கிறது..
நேசம் கொண்ட சிறகை விட்டு
*******


மலை பாதையில் தடுமாறி 
கொண்டிருக்கையில் 
வழித்துணையாய்..
கை பிடித்தாள்..


நிஜம் விட்டு போனதை 
அறியாமல் நிழலை 
பிடித்து கொண்டிருக்கும்..
காணா குருடன் நான்...!
*******


உருகும் மெழுகாய் நானிருக்க 
உன் நினைவுகள் 
பிரகாசமாய் எரிந்து 
கொண்டிருக்கிறது...


என் இறுதிவரை 
உன் நினைவுகள்
பிரகாசமாய்
எரிந்துகொண்டிருக்கும்..!! 
*******


நேசம் கொண்டு 
நேசம் கொண்டு 
ஆறா காயத்தை 
ஆற்ற தனிமையை 
நோக்கி செல்கிறது 
காயம் பட்ட மனம்..!!! 



Thursday, January 26 36 comments

"இரண்டு சூவிங்கம் கொடுங்க"நேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் கதை






பரிதி வழக்கம் போல அதிகாலையே எழுந்து குளித்து முடி திருத்தும் நிலையத்திற்கு புறப்பட்டு கொண்டிருந்தார்.

”என்னப்பா இது காயம்...?!” என கன்னத்தை பார்த்து கேட்டாள் அவர் மகள்.

”அது தெரியலைம்மா... ஏதோ பூச்சி கடிச்சு இருக்கும் போல.. அதான் வீங்கி இருக்கு.”

"என்னப்பா இப்படி சொல்றீங்க..?! பூச்சி கடிச்சது கூட தெரியாமலாதூங்குவீங்க...?? வலி அதிகமா இருக்காப்பா..??”


”வலி கொஞ்சம் அதிகமாதான்ம்மா இருக்கு. கொஞ்சம் சுண்ணாம்பு வச்சா சரியா போய்டும்.”

”ஐயோ... அதெல்லாம் வேணாம்ப்பா..ஹாஸ்பிட்டல் போங்கப்பா..நான் காலேஜ் போயிட்டு வரேன். நீங்க சாப்பிடுங்க” என சொல்லி புறப்பட்டாள்.

மகள் சொல்வதை கேட்காமல் பெட்டி கடையில் சுண்ணாம்பு வாங்கி வைத்து கொண்டு வேலைக்கு கிளம்பினார் பரிதி.


------------------------------------------------------

பரிதி பொறுப்பான குடும்ப தலைவர்.. மனைவி இறந்து பல வருடங்கள் ஆன போதும் தன் கடமைகளை சரியாக செய்து கொண்டிருப்பவர்... முடி திருத்தும் நிலையம் நடத்திவருகிறார். அதன் மூலம் வரும் வருமானத்தை வைத்தே தன் இரு மகள்களையும் படிக்க வைக்கிறார்.

பரிதி. வழியில் உள்ள கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்வது வாடிக்கை. இப்படி நல்ல பழக்கங்களை வைத்திருக்கும் பரிதிக்கு, ஒரு கெட்ட பழக்கமும் இருக்கின்றது.

கோவிலுக்கு சென்று விட்டு அடுத்து அவர் செல்வது மாவா பான் பராக் கடைக்கு. ஒரு நாளைக்கு தேவையான மாவா வாங்கி கொண்டு அங்கேயே சிறிது போட்டு கொண்டு கடைக்கு நகர்ந்தார். மாவா போடும் பழக்கத்தை விளையாட்டாக தொடங்கி விட்டு இப்போது விட முடியாமல் தவித்து வந்தார்.

கடையை திறந்து சுத்தம் செய்து கொண்டிருந்த பரிதி, வாடிக்கையாளர் வந்தவுடன் முடிதிருத்தும் பணியை செய்வதற்கு முன் மீண்டும் ஒரு முறை மாவாவை போட்டு கொண்டார்.  வாடிக்கையாளர் வந்தால் கூட பாக்கு போடுவதை நிறுத்த மாட்டார். மாவா போட்டு வேலை செய்தால் தான் சுறுசுறுப்பாக வேலை செய்யமுடியுமென நினைத்து கொள்வார். 




வாடிக்கையாளர் சென்றவுடன். பரிதியுடைய நெருங்கிய நண்பர் கதிர் தினசரிநாளிதழ் வாங்கி கொண்டு வந்தார். செய்தித்தாளை பிரித்து இருவரும் படிக்கத் தொடங்கினர். மாவா பாக்கெட்டை எடுத்து தன் நண்பரிடம் கொடுத்தார் பரிதி.இருவரும் மாவாவை போட்டு கொண்டு செய்தித்தாளுடன் மாவாவையும் சேர்த்து அரைத்து கொண்டிருந்தனர். இப்படி பரிதி கடை தொடங்கியது முதல் நடந்து வருகிறது...மாவா மூலமே இருவரும் நெருங்கிய நண்பர்கள்.


வாடிக்கையாளர் வந்தவுடன் கதிர் “சரி பரிதி... நான் கிளம்புகிறேன் முடிந்தால் மாலை வருகிறேன். இல்லையேல் நாளை வருகிறேன்” என்று விடைபெற்று கொண்டார் கதிர்.

வாடிக்கையாளரை கவனித்த பரிதி வேலையை பார்த்து கொண்டிருந்த பொழுது பேச்சை தொடங்கிய வாடிக்கையாளர்...


”ஏன் பரிதி... நீ இந்த பாக்கு போடுறதை நிறுத்தவே மாட்டியா..?? முடிவெட்டும் போதாவது நிறுத்தவேண்டியது தானே?”

”அண்ணே...நானும் போடக்கூடாதுன்னுதான் நினைக்குறேன். ஆனா... முடிய மாட்டுதுண்ணே...காலைல கடைக்கு வரும்போது நேரா மாவா கடைக்குதானே கால் போகுது.. நான் முடி வெட்ட பழகும் போது இந்த பழக்கத்தையும் சேர்த்து கத்துகிட்டேண்ணே....”

”அட என்னப்பா நீ... இது சாதாரண விஷயம்ப்பா... பாக்கு போடணும்ன்னு நினைக்கும் போது சூவிங்கம் போட்டுக்கோப்பா... தன்னாலே மறந்திடுவே... சாதாரணமான ஆட்களுக்கே கேன்சர் எல்லாம் வருது. நீ வேற இந்த பாக்க போட்டு மெல்லுற.. பொம்பள பசங்க எல்லாம் வைச்சு இருக்க....பார்த்து நடந்துக்கோ..”


”அண்ணே... இந்த சூவிங்கம் போடுறதையெல்லாம் எப்போவோ செய்து பார்த்துட்டேண்ணே... இருந்தாலும் நான் மீண்டும் ஒரு தடவை முயற்சி செய்து
பார்க்கிறேன்.”

ஐம்பது ரூபாயை கொடுத்து வாடிக்கையாளர் விடைபெற்று கொண்டார்...

------------------------------------------------------

இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். அருகிள் வந்த மூத்தமகள்..
“என்னப்பா இன்னைக்கும் பாக்கு போட்டீங்களா?”

”ஏன்ப்பா இப்படி பாக்கு போடுறீங்க..?! எத்தனை தடவை சொன்னாலும் கேக்க
மாட்டீங்களா..??”

எதுவும் பேசாமல் நின்று கொண்டிருந்தார் பரிதி...

”சரி வாங்க சாப்பிடலாம்.. பாக்கு போட்டு உடம்பை கெடுத்துக்காதீங்கப்பா..”

சாப்பிடும்போது கேட்டாள், ”என்னப்பா ஹாஸ்பிட்டல் போனீங்களா...??”

”இல்லம்மா... கொஞ்சம் சுண்ணாம்பு வச்சேன். வலி கொஞ்சம் பரவாயில்லை.
தூங்கி எழுந்தா சரியா போய்டும் ”

இரவு உணவை முடித்து படுக்க சென்றார்.

காலை வெகு நேரமாகியும் எழவில்லை. சோர்வில் இன்னும் தூங்கிக்கொண்டிருந்தார்.

------------------------------------------------------------------------------

கதிர் செய்தித்தாளை வாங்கிக் கொண்டு கடைக்குச்சென்றார். கடை இன்னும் திறக்கப்படாமலே இருந்தது.பரிதியின் வருகைக்கு காத்திருந்து...அங்கேயேபேப்பர் படித்து கொண்டிருந்தார் கதிர். தன் வேலைக்கு நேரம் ஆவதால் செய்தித்தாளை கடையின் ஷட்டரில் மாட்டி வைத்து விட்டு சென்று விட்டார்.

மறுநாளும் கடை பூட்டி இருப்பதை பார்த்த நண்பர் பரிதியின் வீட்டுக்கே சென்றார். அங்கே பரிதி காய்ச்சலில் படுத்துகொண்டிருந்தார்.

”என்ன பரிதி... உடம்பு சரி இல்லையா...?! ”

”ஆமாண்டா... காய்ச்சல் அதிகமா இருந்துச்சு... நேத்து நைட்தான் கிளினிக்
போயிட்டு வந்தேன். ”

”என்னடா சொன்னாங்க... இப்போ எப்படி இருக்கு...?!”

”இப்போ காய்ச்சல் இல்லை. கன்னத்துல புண் இருக்கு. அதனாலதான்வந்திருக்கும்.எதுக்கும் ஒரு வாரம் கழிச்சு வந்து பாக்கச் சொன்னாரு டாக்டர். இன்னைக்கு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு நாளை கடை
திறந்திடுவேன்டா.... ”

”சரிடா... எனக்கும் வேலைக்கு நேரமாச்சு. நானும் கிளம்புறேன். நாளைக்கு கடைக்கு வரேன். ”

-----------------------------------------------------------------------------

ஒரு வாரத்திற்கு மேல் காயம் ஆறுவதும், மீண்டும் வருவதுமாய் இருந்ததால்
மருத்துவமனைக்கு செல்லாமலே இருந்தார் பரிதி.

வழக்கம் போல காலையில் கதிர் பேப்பர் கொண்டு வர..” என்னடா இன்னுமா உனக்கு காயம் ஆறல.. இதுல பாக்கு வேறயா” என்று மாவாவை பிடிங்கி கொண்டார்.

”டேய்... கொஞ்சம் மாவா கொடுடா... நீ மட்டும் போடுறே..?”

”டேய்...ஒழுங்கா பேப்பர் படி.. ”  என பேப்பரை பிரித்த பொழுது... ஒரு துண்டு நோட்டீஸ் ஒன்று விழுந்தது..எதாவது விளம்பரமாய் இருக்குமென தூக்கிப்போட பார்த்தார் பரிதி.

”என்னடா அது என வாங்கி படித்த கதிர்.....

அதை பரிதியிடம் காண்பித்தார்..பார்த்தவுடன் இருவருமே மௌனமாய் இருந்தனர்...புற்றுநோய் கண்டறிய இலவச சோதனை என புற்று நோயின் அறிகுறிகள் தொடர்பான படங்கள் அந்த நோட்டீஸில் இருந்தது..  பரிதியின் கன்னத்தில்இருந்த காயங்கள் போலவே நோட்டீஸில் இருந்தது.

”என்னடா எனக்கு இருக்கற காயம் மாதிரியே இந்த நோட்டிஸ்ல இருக்கு. எனக்கு கேன்சரா இருக்குமோ..??”

”அதெல்லாம் இருக்காதுடா...ஆனா நமக்கும் நாற்பது வயசுக்கு மேல ஆகுது, நாற்பது வயசுக்கு மேல இருக்குறவங்க புற்றுநோய் இருக்கான்னுபரிசோதனை பண்ணிக்கணும்ன்னு சொல்றாங்க... வா... நாம போய் சும்மா பார்த்துட்டு வருவோம்.

------------------------------------------------------------------------

மறுநாள் புற்றுநோய் இருக்கிறதா இல்லையா என பார்க்க சென்றனர்... பரிதியை ஒரு டாக்டர் பரிசோதனை செய்து கொண்டிருந்தார். டாக்டர் மற்ற டாக்டரை அழைத்து காண்பித்தார்..

”பாக்கு போடுவீங்களா..?? ”

”ஆமா டாக்டர்..”

”எத்தனை வருசமா போடுறீங்க..??”

”இருபதுவருசமா போடுறேன் டாக்டர்..”

”வலி அதிகமா இருக்கா..?”

”ஆமாங்க... வலி அதிகமா இருக்கு.. ”

”பரிதி உங்களுக்கு புற்று நோய்க்கான அறிகுறி தெரியுது. நாளைக்கு ஹாஸ்பிட்டல் வாங்க... உங்க காயத்தை சோதனை செய்யணும்..நல்ல வேளையா இப்பயேவந்தீங்க... புற்றுநோய் முத்திப்போய் இருந்தா ஒண்ணுமே செய்திருக்க முடியாது...  கண்டிப்பா நாளைக்கு ஹாஸ்பிட்டல் வாங்க... புற்றுநோயை மேலும் பரவாம தடுத்திடலாம்.உங்க வீட்டுல யாராவது நாற்பது வயதிற்கு மேல இருந்தா வந்து பரிசோதனை செய்து கொள்ள சொல்லுங்க பரிதி..”

”சரிங்க டாக்டர்” என தளர்ந்த குரலில் கூறி வெளியேறினார் பரிதி..

கதிரும் பரிதியும் பேசிக்கொண்டே சென்றனர்...

”இனிமே நாம பாக்கே போடக்கூடாது பரிதி.. ” என்றார் கதிர்.

”ஆமாண்டா...நல்ல வேளை உனக்கு ஒன்ணுமில்லைன்னு சொல்லிட்டாங்க..  உனக்கு
ஒண்னும் ஆகலேன்னு இனி நீ பாக்கு போட ஆரம்பிச்சிராத..”

”நீ வேற பரிதி... நான் இனி போட மாட்டேன்டா.. யாராவது போடுறதை
பார்த்தாலும் தடுக்கப்போறேன்டா.. ”

”நல்லா சொன்னடா.. ஆனா எனக்கு இந்த நோய் தீவிரமாகிறதுக்குள்ள என் மகள்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை எப்படி அமைச்சு தரப்போறேன்னு கவலையா
இருக்கு.”

”கவலைப்படாதே அதான் ஆரம்பத்திலேயே வந்துட்டோம்ல சரியாகிடும்..”

“இனிமே நீயும் நல்லா உடம்பை கவனிச்சிக்கோ கதிர்” லேசாக கண்கள் கலங்கின பரிதிக்கு…

“நிச்சயமாடா.. என் மனைவிக்குக் கூட நாற்பது வயசு ஆகுது...அவளையும் நாளைக்கு ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போய் சோதனை செய்யப்போறேன்டா சரி...வா பரிதி... டீ குடிச்சிட்டு போகலாம்.. ”

”சரிடா. ”

பரிதி பெட்டி கடைக்கு சென்று... ”இரண்டு சூவிங்கம் கொடுங்க” என்றார். 







Monday, January 23 10 comments

உன்னை பற்றி...







என் வீட்டு
ஜன்னலிலிருந்து உன்னை
பார்க்கையில்..
ஜன்னல்கள் கூறுகின்றன
உன்னுள் சிறை பட்டுவிட்டேன்..!!!


தெரு முனை பூக்கடை
பூக்களெல்லாம்...
உன்னை பின் தொடர்கிறது..
நீ திரும்பி பார்த்து 
விடாதே...
மடிந்தே விடும்...!!!


ஓராயிரம் முறை
காதோரோம் சரிவது..
கூந்தல் மட்டுமல்ல
நானும் சரிந்து 
கொண்டிருக்கிறேன்...
நொடி கொருமுறை...!!!



ரோஜா செடி ஒன்று 
வளர்த்து வருகிறேன்
உனக்காக.. 
என்னை போலவே 
தினமும் பூத்து பூத்து
வாடி கொண்டிருக்கிறது
உன் வருகைக்காக...!!



உனக்காக காத்திருக்கிறேன்
உன் பாதையில்...
தனியாக காத்திருக்கிறேன்
உன் வருகைக்காக...
உன் விழியருகே காத்திருக்கிறேன்
உன் ஒரு துளி பார்வைக்காக...!!



உன் வருகைக்காக 
காத்திருந்து காத்திருந்து 
வாடி போனேன் 
உயிரற்று..
என் வசந்த காலம் 
எப்போது 
தொடங்குமென 
காத்திருக்கிறேன் 
ஏக்கத்தோடு...!!!



Friday, January 6 9 comments

பாசத்தை பழி தீர்க்க...






ஆயிரம் கனவுகள்
ஆயிரம் தவிப்புகள்
ஆயிரம் ஏக்கங்கள்
பிறக்க போகும் என்னிடம் ...


அனைவரையும்
பரபரப்பில் ஆழ்த்தி
நான் மட்டும் சுற்றி சுற்றி
ஆடிக்கொண்டிருக்க...
ஒன்றும் தெரியாதது போல்
வீரிட்டு அழுது வெளிவர..
ஆனந்த கண்ணீரின் வரவேற்பில்


பாதுகாப்பான இருட்டு
உலகிலிருந்து
பாதுகாப்பற்ற இருட்டு
உலகத்தில் இனி..!!


ஒன்றுமறியாமல்
கண்களை சிமிட்டிக் கொண்டிருக்கையில்
அவளின் அரவணைப்பில்
உறங்கிப் போனேன்...


எட்டி எட்டி உதைக்க 
அவள் தட்டி தட்டி கொடுக்க 
ஆழ்ந்த உறக்கத்தை கொடுத்த
அவளின் உறக்கம் கெடுத்தேன்..!!


பார்த்து பார்த்து செய்த உன்னிடம் 
பார்க்காமல் கூட செய்ததில்லை 
பார்த்து செய்தாலும்
பாசகடனை தீர்க்க முடியாது..!!


ஏதேதோ இல்லம் தேடி 
விட்டு செல்லும் உன்னை
பார்த்து போ என்னும் 
மனம் உன்னை தவிர வேறு யாருக்கு..??


ஆயிரம் ஆயிரம் துளி 
பாசத்தை கொடுத்துவிட்டு
ஒரு துளி பாசத்தை கூட 
எதிர்பார்க்காத உன்னை..


அடுத்ததொரு ஜென்மத்தில் 
நான் நீயாகவும் நீ நானாகவும்
பிறந்தால் பாசத்தை 
பழி தீர்த்துக் கொள்வேன்...!!



Tuesday, January 3 2 comments

விமர்சனமா..?? மௌனகுரு



ஒரு திரைப்படம் பார்க்க வேண்டுமென்றால் விமர்சனம் பெரிதும் உதவியாய் இருக்கும். முன்பு சினிமா விமர்சனம் செய்யப்பட்டதை போல.. இப்பொழுது யாரும் சரியாக விமர்சனம் செய்வதில்லை. விமர்சனம் செய்பவர்களுக்கு பிடித்த நடிகரின் படம் என்றால் ஆஹா ஓஹோ என்றும், பிடிக்காதவர் என்றால் சரமாரியாக குறை சொல்வதும் வாடிக்கையாகிவிட்டது.  மக்கள் விமர்சனம் அதை விட மோசமாகிவிட்டது. தன் புத்திசாலி தனத்திற்கு படத்தை குறை சொல்ல தொடங்கிவிடுகிறார்கள்... படத்தை பார்த்து விட்டு சொன்னால் பரவாயில்லை, பார்காமலே படம் நன்றாக இல்லையென்று சொல்வார்கள் பலர். சில நண்பர்கள் என்னிடம் சொல்வார்கள் படம் நன்றாக இல்லையென்று.. படம் பார்த்து விட்டீர்களா என்றால் இல்ல பார்க்கல நண்பர்கள் படம் நல்லா இல்லை என்பார்கள்.. இப்படி தான் பலர் படத்தை பார்காமலே படத்தை பற்றி விமர்சனம் சொல்லி விடுகிறார்கள்.


பல நல்ல படங்கள் இப்படி தவறான விமர்சங்களால்,  வெற்றி பெற முடியாமல் போய் விடுகிறது விமர்சனம் செய்யும் பொழுது நாம் யோசித்தே செய்யவேண்டும்.. ஒரு படம் நன்றாக இல்லையென்று சொல்வது தான் இப்பொழுது பேஷன் ஆகிவிட்டது. ஒரு திரைப்படம் இரண்டு மணி நேரம் பொழுது போகிறதா அது தான் தேவை நமக்கு, அதை விட்டுவிட்டு எதிர்பார்த்த அளவிற்கு இல்லை அப்படி இப்படி குறை சொல்லி கொண்டு தான் இருக்கிறோம்.

பதிவுலகில் முதல் நாள் முதல் காட்சி பார்த்து விட்டு விமர்சனம் எழுதும் சிலர்.. படம் நன்றாக இல்லையென்று தான் பதிவு எழுதி இருக்கிறார்கள். படம் நன்றாக இல்லையென்று சொல்வது ஒரு பெருமையா.. ?? படங்களின் குறைகளை சொல்லலாம், டப்பா படம் என்று எல்லாம் விமர்சனம் செய்யலாமா..?? இப்படி பட்ட விமர்சங்களால் பலர் நல்ல படங்களை பார்க்க முடியாமல் போகிறது..!!   நல்ல படங்களை எந்த காழ்புணர்ச்சி இல்லாமல் விமர்சனம் செய்யுங்கள். என்ன தான் விமர்சனம் செய்பவர்கள் படம் நன்றாக இருக்கிறதென்று கூறினாலும் மக்கள் கண்டு கொள்ளாமல் விட்ட படங்களில் இந்த படமும் ஒன்று. 



படத்தின் டிரைலரை பார்க்கும் பொழுதே, படம் நன்றாக இருக்கும் என எதிர்பார்த்தேன், எதிர்பார்த்தது வீண் போக வில்லை. படத்தின் கதை : அதிகாரத்தில் இருப்பவர்கள் செய்யும் தவறால் ஒரு சாதாரண கல்லூரி மாணவன் சிக்கி கொள்கிறார் அவர்களிடம் இருந்து மீண்டுவருகிறாரா இல்லையா என்பதே கதை. 

அருள் நிதியின் நடிப்பு பல மடங்கு மெருகேறி உள்ளது நன்றாகவே தெரிகிறது,சென்னையில் வளர்ந்த அவர் ஊர்காரரை போல் வட்டார மொழி பேசுவது சிறப்பாக உள்ளது. தனக்கு கொடுத்த வேலையை மிக கச்சிதமாக செய்து இருக்கிறார் அருள்நிதி.  அரசியல் காரணத்தால் இவர் படங்களை ஒதுக்காமல் இருந்தால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொள்வார். அந்த அளவிற்கு நடிப்பு திறமையை வைத்திருக்கிறார். 

இனியா முந்தய படத்தில் பார்த்த இனியா வா என கேட்க வைக்கிறார், நடிப்பதற்கு பெரிதாக வாய்ப்பில்லை என்றாலும் கதாபாத்திரத்திற்கு ஏற்றாற்போல் நடிப்பை வெளிபடுத்தி இருக்கிறார். 

வில்லன் ஜான் விஜய், நகைச்சுவையில் வந்தால், நகைச்சுவையில் கலக்கி விடுகிறார், வில்லன் கதாபாத்திரம் வந்தால்.. அதிலும் ஒரு கை பார்த்து விடுகிறார்.. ஒரு தவறு செய்து விட்டு, பயத்தில் தவறுக்கு மேல் தவறு செய்து.. கண்களில் பயத்துடன் நடித்து இருக்கிறார் ஜான் விஜய்.. இனி நிறைய படங்களில் இவரை வில்லனாக பார்க்கலாம். 


இயக்குனர் சாந்தகுமார் முதல் படத்திலே நல்ல பெயரை வாங்கிவிடுகிறார், நேர்த்தியான திரைகதை, கதாபாத்திரங்களை தேர்வு செய்தவிதம், அனைத்திலும் நல்ல அனுபவம் பெற்றவராக தெரிகிறார். குறிப்பாக போலீஸ் எஸ்.ஐ உமா ரியாஷை தேர்வு செய்தது, நிறைய படங்களில் நல்ல போலீஸாக வருபவர் ஆணாக தான் இருப்பார், இதை இயக்குனர் மாற்றி யோசித்து இருக்கிறார்.  திரைக்கதையின் வேகம்.. ஹிரோவின் டல் லூக்,  ஹீரோவின் வசன உச்சரிப்புகள் எல்லாம் இயக்குனரின் கைவண்ணம் என்று நன்றாக தெரிகிறது,  படம் பார்க்கும் பொழுது ஆங்கில படம் பார்த்த திருப்தி வருகிறது.  நல்ல படத்தை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் பட்டியல்களில் சாந்தகுமார் படமும் இடம் பெரும். 

படத்தை பற்றிய பல சுவாரசியமான தகவல்கள் இங்கு பகிராமல் விட்டு இருக்கிறேன், படம் பார்க்கும் பொழுது உங்களுக்கு சுவாரசியம் குறைந்து விடாமல் இருப்பதற்காக. நல்ல படங்களை எதிர்பார்பவர்கள் கட்டாயம் இந்த படத்தை பார்க்கலாம். இந்த மாதிரியான நல்ல படங்கள் திரையரங்குகளை விட்டு தூக்கப்படுவது வருத்தமான ஒன்று..



 
;