Tuesday, January 3

விமர்சனமா..?? மௌனகுரு



ஒரு திரைப்படம் பார்க்க வேண்டுமென்றால் விமர்சனம் பெரிதும் உதவியாய் இருக்கும். முன்பு சினிமா விமர்சனம் செய்யப்பட்டதை போல.. இப்பொழுது யாரும் சரியாக விமர்சனம் செய்வதில்லை. விமர்சனம் செய்பவர்களுக்கு பிடித்த நடிகரின் படம் என்றால் ஆஹா ஓஹோ என்றும், பிடிக்காதவர் என்றால் சரமாரியாக குறை சொல்வதும் வாடிக்கையாகிவிட்டது.  மக்கள் விமர்சனம் அதை விட மோசமாகிவிட்டது. தன் புத்திசாலி தனத்திற்கு படத்தை குறை சொல்ல தொடங்கிவிடுகிறார்கள்... படத்தை பார்த்து விட்டு சொன்னால் பரவாயில்லை, பார்காமலே படம் நன்றாக இல்லையென்று சொல்வார்கள் பலர். சில நண்பர்கள் என்னிடம் சொல்வார்கள் படம் நன்றாக இல்லையென்று.. படம் பார்த்து விட்டீர்களா என்றால் இல்ல பார்க்கல நண்பர்கள் படம் நல்லா இல்லை என்பார்கள்.. இப்படி தான் பலர் படத்தை பார்காமலே படத்தை பற்றி விமர்சனம் சொல்லி விடுகிறார்கள்.


பல நல்ல படங்கள் இப்படி தவறான விமர்சங்களால்,  வெற்றி பெற முடியாமல் போய் விடுகிறது விமர்சனம் செய்யும் பொழுது நாம் யோசித்தே செய்யவேண்டும்.. ஒரு படம் நன்றாக இல்லையென்று சொல்வது தான் இப்பொழுது பேஷன் ஆகிவிட்டது. ஒரு திரைப்படம் இரண்டு மணி நேரம் பொழுது போகிறதா அது தான் தேவை நமக்கு, அதை விட்டுவிட்டு எதிர்பார்த்த அளவிற்கு இல்லை அப்படி இப்படி குறை சொல்லி கொண்டு தான் இருக்கிறோம்.

பதிவுலகில் முதல் நாள் முதல் காட்சி பார்த்து விட்டு விமர்சனம் எழுதும் சிலர்.. படம் நன்றாக இல்லையென்று தான் பதிவு எழுதி இருக்கிறார்கள். படம் நன்றாக இல்லையென்று சொல்வது ஒரு பெருமையா.. ?? படங்களின் குறைகளை சொல்லலாம், டப்பா படம் என்று எல்லாம் விமர்சனம் செய்யலாமா..?? இப்படி பட்ட விமர்சங்களால் பலர் நல்ல படங்களை பார்க்க முடியாமல் போகிறது..!!   நல்ல படங்களை எந்த காழ்புணர்ச்சி இல்லாமல் விமர்சனம் செய்யுங்கள். என்ன தான் விமர்சனம் செய்பவர்கள் படம் நன்றாக இருக்கிறதென்று கூறினாலும் மக்கள் கண்டு கொள்ளாமல் விட்ட படங்களில் இந்த படமும் ஒன்று. 



படத்தின் டிரைலரை பார்க்கும் பொழுதே, படம் நன்றாக இருக்கும் என எதிர்பார்த்தேன், எதிர்பார்த்தது வீண் போக வில்லை. படத்தின் கதை : அதிகாரத்தில் இருப்பவர்கள் செய்யும் தவறால் ஒரு சாதாரண கல்லூரி மாணவன் சிக்கி கொள்கிறார் அவர்களிடம் இருந்து மீண்டுவருகிறாரா இல்லையா என்பதே கதை. 

அருள் நிதியின் நடிப்பு பல மடங்கு மெருகேறி உள்ளது நன்றாகவே தெரிகிறது,சென்னையில் வளர்ந்த அவர் ஊர்காரரை போல் வட்டார மொழி பேசுவது சிறப்பாக உள்ளது. தனக்கு கொடுத்த வேலையை மிக கச்சிதமாக செய்து இருக்கிறார் அருள்நிதி.  அரசியல் காரணத்தால் இவர் படங்களை ஒதுக்காமல் இருந்தால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொள்வார். அந்த அளவிற்கு நடிப்பு திறமையை வைத்திருக்கிறார். 

இனியா முந்தய படத்தில் பார்த்த இனியா வா என கேட்க வைக்கிறார், நடிப்பதற்கு பெரிதாக வாய்ப்பில்லை என்றாலும் கதாபாத்திரத்திற்கு ஏற்றாற்போல் நடிப்பை வெளிபடுத்தி இருக்கிறார். 

வில்லன் ஜான் விஜய், நகைச்சுவையில் வந்தால், நகைச்சுவையில் கலக்கி விடுகிறார், வில்லன் கதாபாத்திரம் வந்தால்.. அதிலும் ஒரு கை பார்த்து விடுகிறார்.. ஒரு தவறு செய்து விட்டு, பயத்தில் தவறுக்கு மேல் தவறு செய்து.. கண்களில் பயத்துடன் நடித்து இருக்கிறார் ஜான் விஜய்.. இனி நிறைய படங்களில் இவரை வில்லனாக பார்க்கலாம். 


இயக்குனர் சாந்தகுமார் முதல் படத்திலே நல்ல பெயரை வாங்கிவிடுகிறார், நேர்த்தியான திரைகதை, கதாபாத்திரங்களை தேர்வு செய்தவிதம், அனைத்திலும் நல்ல அனுபவம் பெற்றவராக தெரிகிறார். குறிப்பாக போலீஸ் எஸ்.ஐ உமா ரியாஷை தேர்வு செய்தது, நிறைய படங்களில் நல்ல போலீஸாக வருபவர் ஆணாக தான் இருப்பார், இதை இயக்குனர் மாற்றி யோசித்து இருக்கிறார்.  திரைக்கதையின் வேகம்.. ஹிரோவின் டல் லூக்,  ஹீரோவின் வசன உச்சரிப்புகள் எல்லாம் இயக்குனரின் கைவண்ணம் என்று நன்றாக தெரிகிறது,  படம் பார்க்கும் பொழுது ஆங்கில படம் பார்த்த திருப்தி வருகிறது.  நல்ல படத்தை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் பட்டியல்களில் சாந்தகுமார் படமும் இடம் பெரும். 

படத்தை பற்றிய பல சுவாரசியமான தகவல்கள் இங்கு பகிராமல் விட்டு இருக்கிறேன், படம் பார்க்கும் பொழுது உங்களுக்கு சுவாரசியம் குறைந்து விடாமல் இருப்பதற்காக. நல்ல படங்களை எதிர்பார்பவர்கள் கட்டாயம் இந்த படத்தை பார்க்கலாம். இந்த மாதிரியான நல்ல படங்கள் திரையரங்குகளை விட்டு தூக்கப்படுவது வருத்தமான ஒன்று..



2 comments:

இந்திரா said...

டப்பா படங்களுக்கு கூட பெரிய விளம்பரங்கள் கொடுத்து எதிர்பார்ப்பை தூண்டியே ஜனங்களை வரவைத்து படத்தை ஓட்டிவிடுகின்றனர்.

இதுபோன்ற படங்கள் டாக்குமென்ட்ரிக்கு கிடைக்கும் வரவேற்பையே பெறுகின்றன. வருத்தமான விஷயம் தான்.
என்ன செய்ய????

பாலா said...

இந்த படத்தின் பெரிய செட்பேக் அருள்நிதி என்பது என் கருத்து. ஏனென்றால் அவர் திறமை இல்லாமல், தாத்தாவின் இன்ப்ளுயன்சில் நடிக்க வந்தவர் என்ற எண்ணம் மக்கள் மனதில் பதிந்து விட்டது. ஆகவேதான், இவனெல்லாம் என்ன நடித்திருக்க போகிறான் என்று படத்தை தவிர்த்து விடுகிறார்கள். மேலும் இன்னும் மூன்றே மாதத்தில் கலைஞர் டிவியில் இந்த படத்தை எதிர்பார்க்கலாம். அதுவும் ஒரு காரணம்.

 
;