Tuesday, March 13 8 comments

மரணங்கள் சில...







நான் பார்த்த மரணங்கள் பற்றி பதிவு எழுதவேண்டுமென்று நெடுநாளாய் யோசித்து வைத்திருந்தேன்.மரணம் பற்றி பதிவு எழுத போகிறேன் என நண்பர்களிடம் கூறியதற்கு.. அப்படியெல்லாம் பதிவு வேண்டாம் என்றார்கள். ஆனால் எனக்கு எழுதவேண்டுமென்றே தோன்றியது. மரணம் பற்றி பேசுவதற்கு நாம் ஏன் பயப்பட வேண்டும்..? என்றோ ஒரு நாள் மரணம் நம்மை நேசம் கொள்ளத்தான் போகிறது... பிறகு என்ன..பேசுவதற்கு தயக்கம் ?? 


தூங்கிகொண்டிருக்கும் பொழுதே நம் உயிர் பிரிந்து விட வேண்டும். நோய் நொடி இல்லாத மரணம் நிகழ வேண்டுமென்பது நம்மில் பலரது ஆசையாக இருக்கும். மரணம் கூட ஒரு வகை வரம் தான். நம் கண்முன்னே நிகழும் மரணங்கள் எப்போதும் மறக்க முடியாத நிகழ்வாய் மாறிவிடும். அப்படி எனக்கு முன் நடந்த நிகழ்வுகளை உங்களிடமும் பகிர்ந்து கொள்கிறேன்.வாருங்கள்...


நான் சந்தித்த நிகழ்வுகளை கூறும் முன் என் தாத்தாவின் அப்பா இறந்த கதை பற்றி சொல்கிறேன். எங்கள் தாத்தா எங்களிடம் அடிக்கடி கூறிய கதை இது. எங்கள் தாத்தாவின் அப்பா மழை பெய் என்றால் மழை பெய்யுமாம். அப்படி ஒரு சக்தி அவரிடம் இருந்ததாம். தான் இறந்து போகப்போகிறோம் என்பது அவருக்கு முன்பே தெரிந்து விட்டதாம்.. நான் இத்தனை மணிக்கு இறந்து விடுவேன். அதற்குள் பசங்களுக்கு எல்லாம் சாப்பாடு போட்டு விட்டு எல்லா வேலைகளும் செய்துவிடு எனச்சொல்லி படுக்க சென்றாராம். அதே போல் அவர் மரணமும் அடைந்தாராம்... நம்ப முடிகிறதா உங்களால்..??


நம் வீட்டில் ஒரு மரணம் நிகழ்ந்தால் நம்மால் எப்போதுமே மறக்க முடியாது அல்லவா..? அப்படி ஒரு நிகழ்வு தான் இது. எங்களுக்கும் மரணம் நிகழ்ந்தால் எங்கள் தாத்தாவிற்கு வந்ததை போல் வரவேண்டுமென்று எங்கள் குடும்பத்தில் அனைவரும் சொல்லிகொண்டிருப்போம். அப்படியொரு மரணம் தான் அவரை நெருங்கியது. 


அவர் மரணிப்பதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பு கூட அவர் தொழில் மூலம் வருமானம் ஈட்டி விட்டுதான் இறந்தார். உடல் சோர்வாக இருக்கிறதென்று சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறேன் என படுக்க சென்றார். ஐந்து நிமிடம்தான் இருக்கும். மிகவும் முடியவில்லையென்றார். அன்றைய தினம் பார்த்து அனைவரும் வீட்டிலே இருந்தோம்.. அவரின் மகன்,மகள் உள்பட.. (ஒரு மகன் வெளியூரில் இருப்பதால் அவரை தவிர) ஒவ்வொரு பாகமாய் அடங்கியது. முதலில் பேச்சு.. பிறகு கண்.. என அடுத்தடுத்து..  அனைவரும் பால் ஊற்றினார்கள்.உயிர்பிரியவில்லை.. ஊரில் இல்லாத மகன் பெயரை சொல்லி பால் ஊற்றியவுடன் உயிர் பிரிந்து விட்டது. 


அவர் மரணம் சில நிமிடங்களிலே நிகழ்ந்து விட்டது.. கடைசி வரை யார் தயவின்றி 85 வயது வரை தானே சம்பாதித்து எங்களையும் வளர்த்து அவரையும் பார்த்துக்கொண்டார். அவரின் மரணம் எங்கள் கண் முன்னே இன்னும் அப்படியே நிற்கிறது.


அதற்கு பிறகு என்னை சில காரணங்களால் மருத்துவமனையில் அனுமதித்து இருந்தார்கள். அப்போது நான் கண்ட மரணங்கள் அதிகம்.. எனக்கு பக்கத்திலே அவசரசிகிச்சை படுக்கை இருக்கும். விபத்தில் அடிபட்டவர்களை அங்கே கொண்டு வருவார்கள்.தூங்கும் போது அந்த படுகையில் யாரும் இருக்க மாட்டார்கள். நடு இரவில் சப்தம் கேட்கும். என்னவென்று பார்த்தால் அந்த படுக்கையில் யாரையாவது அனுமதித்து இருப்பார்கள். மருத்துவர்கள் அந்த நபருக்கு  நெஞ்சை அழுத்திக்கொண்டு உயிர்காக்கும் சிகிச்சையில் ஈடுபட்டு கொண்டிருப்பார்கள். அந்த சப்தத்தை கேட்ட பிறகு தூக்கம் வராது. அப்படியே ஏதோ தூங்கி எழுந்து பார்த்தால் அந்த நபர் இருக்க மாட்டார். கேட்டால் இறந்துவிட்டார் என்பார்கள். அங்கு வருபவர்களில் பலர் வாகன விபத்தில் அடிபட்டுத்தான் வருவார்கள். 


நான் மருத்துவமனையிலே நெடுநாள் இருந்ததால் அங்கே என் வயதுடைய காந்தி என்ற ஒருவன் நண்பன் ஆனான்.. அவன் இருதயநோய் காரணமாக அனுமதிக்கப்பட்டு இருந்தான். சில நாள் நண்பன்தான் ஆனாலும் இன்னும் நினைவில். எல்லாம் சரியாகி விடும் என்ற ஆசையில் அறுவைசிகிச்சைக்கு சென்றான். ஆனால் திரும்பி வரவேயில்லை... மருத்துவரின் அலட்சியமே காரணமாக அமைந்தது அவன் மரணத்தில்.  அங்கு பத்து பேருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்தால் அதில் ஆறு பேர் மட்டுமே உயிர் பிழைப்பார்கள். 


நான் சமீபத்தில் கண்ட மரணம் இது.. குலதெய்வ கோவிலுக்காக ஊருக்கு சென்ற போது பார்த்தது.. ஒருவர் நன்றாக சுற்றி திரிந்து கொண்டிருந்தார். திடீரென்று கோவில் வெளியே வந்து மோர் வாங்கி குடிப்பதற்குள் இறந்து விட்டார்.. சில நொடிகளுக்குள் மரணம் நிகழ்ந்து விட்டது. 


மரணம் நமக்குள் எப்போது வேண்டுமென்றாலும் வந்து விடுகிறது... நல்ல மரணத்திற்கு கூட நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். என்னை கேட்டால் தூங்கி கொண்டிருக்கும் போதே நம் உயிர் பிரிவதுதான் நல்ல மரணம். அப்படி இறப்பவர்கள் புண்ணியம் செய்தவர்கள் என்றும் சொல்கிறார்கள்.. நம்மில் பலர் மரணத்தை நேசித்து ஏற்று கொள்வதில்லை. 


இப்படி நாம் சந்தித்த மரணங்கள் பல மறக்க முடியாததாகவே இருக்கும்.. நீங்கள் பல மரணங்களை சந்தித்து இருப்பீர்கள். அவைகளை பற்றியும் கருத்துகளிலோ அல்லது பதிவிலோ பகிர்ந்து கொள்ளுங்கள்.




யாருமில்லாத இரவு 
காற்றுமில்லா இரவு..
பற்றி எரியும் நெருப்பு 
நான் யார்...?!


காற்றில் கலந்த தேகம்.. 
கண்ணீரில் கலந்த தேகம்...
பறந்து விட்ட மூச்சை 
எட்டி பிடிக்க நினைக்கும் 
நான் யார்...?! 


நித்தம் நித்தம் . 
நிலா சோறூட்டி
வளர்த்த உன்னை 
பிண்டம் வைக்க 
வைத்த நான் யார்...?!
  
காத்திருந்து காத்திருந்து 
கருவுற்ற உன்னை 
காக்கவைத்து போன 
நான் யார்...?!


ஓய்வில்லாமல் உழைச்சு 
சிறு பிள்ளை நீ காக்க.. 
வேகத்தில் நான் செல்ல 
மரித்து போனேனே..
இனி என்றும் காணாத 
உன்னை தவிக்க விட்டு சென்ற
நான் யார்...?! 



 
;