Wednesday, May 5

நன்றி தெரிவித்தார் சீமான்

சென்னை: இலங்கையின் தமிழர் பகுதிகளை இலங்கைப் படையினர் அழித்ததன் ஒருஆண்டு நிறைவையொட்டி சிங்கள அரசு ஏற்பாடு
செய்துள்ள கலை நிகழ்ச்சிகளுக்கு செல்வதாக இருந்த தமிழ்நாடு சின்னத்திரை
கலைஞர்கள், தங்களது கோரிக்கையை ஏற்று அதை ரத்து செய்துள்ளதற்கு இயக்குநரும், நாம் தமிழர் அமைப்பின் தலைவருமான சீமான் நன்றி தெரிவித்துள்ளார்.

வன்னி அழிப்பின் ஓராண்டினை மிகப்பெரும் விழாக்களாக ஏற்பாடு செய்து சிங்கள அரசு முன்னெடுத்து வருகின்ற நிலையில் அதன் ஒழுங்குபடுத்தலில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மே 18 அன்று நாடெங்கும் வெற்றிக் கொண்டாட்டங்கள் நடைபெற வேண்டும் என்று கோத்தபய ராஜபக்‌ஷே உத்தரவிட்டுள்ளார்.அதன் விளைவாக பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
 கடந்த ஆண்டு வன்னியில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய இன அழிப்பு நடவடிக்கை நடைபெற்று ஆண்டு ஒன்று நிறைவடைந்து.
வருகின்ற இந்த நேரத்தில் தமிழகத்தின் சின்னத்திரை நட்சத்திரங்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்திற்காக யாழ்ப்பாணம், வவுனியா வருகின்றனர் என்ற செய்தியும் அதில் ஒன்றாகும். அதற்கான ஏற்பாடுகள் மிக விரைவாக நடைபெற்று வந்தன. வண்ணச் சுவரொட்டிகள் அச்சடிக்கப்பட்டும் இருக்கின்றது.

ஆனால் தமிழ் மக்கள் தமது உயிர்களை பல்லாயிரக்கணக்கில் பறிகொடுத்த வடக்கு மண்ணில் அந்த பலி கொடுப்பின் ஓராண்டு நிறைவு நடக்கும் அதே மாதத்தில் சிங்கள அரசு மேற்கொள்ளும் கேளிக்கை நிகழ்வில் பங்குகொள்ள
தமிழகத்தில் இருந்து சின்னத்திரைசத்திரங்கள் நிகழ்ச்சி நடத்த செல்ல இருப்பது தமிழர்கள் அனைவரது மனதிலும் வேதனையைத் தோற்றுவித்தது.
இன உணர்வாளர்களின் இந்த உணர்வுகளை நாம் தமிழர் இயக்கம் தமிழக சின்னத்திரை கலைஞர்களுக்கு தெரிவித்தது. தமிழனாய் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும்படியும் இன அழிப்பில் நடைபெறும் வெற்றிக் கொண்டாட்டங்களைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தது.

இயக்கத்தின் வேண்டுகோளை ஏற்ற சின்னத்திரை கலைஞர்கள் இன்று சீமானிடம் தங்கள் முடிவைத் தெரிவித்தனர். ஏற்பாட்டாளர்களின் நிகழ்ச்சி நடத்தும் நோக்கம் தமக்கு தெரியவில்லை என்றும் தற்பொழுது தாங்கள் இலங்கை செல்ல இருந்த பயணத்தை இன உணர்வோடு ரத்து செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

சீமான் இது குறித்து கருத்து தெரிவிக்கையில் தமிழர்களின் உணர்வைப் புரிந்து கொண்டு போக மறுத்த சின்னத்திரை கலைஞர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றேன். மற்றவர்களும் இவர்களைப் பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலிருந்து இசைக் குழுவினரும் கலை நிகழ்ச்சிகள் நடத்தும் கலைக் குழுவினரும் வரும் மே 12 ந்தேதியில் இருந்து பங்கேற்க உள்ளனர் என்பது சகித்துக் கொள்ள முடியாத வேதனையை அளிக்கிறது.









0 comments:

 
;